த.வெ.க., ஒரு குட்டி திராவிட கட்சி; விஜய்யை விளாசிய தமிழிசை!

7

சென்னை: ஒரு குட்டி திராவிடக்கட்சியாக தான் நடிகர் விஜய்யின் த.வெ.க., இருக்கிறது என்று பா..ஜ., மூத்த தலைவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை விமர்சித்துள்ளார்.

நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ளார். கட்சிக் கொடியை அவர் கடந்த மாதம் அறிமுகப்படுத்தி இருந்தார். வரும் 27ம் தேதி நடத்துவதாக அவர், கட்சியின் முதல் மாநாட்டு பணிகளில் பிஸியாக இருக்கிறார். மாநாட்டுக்கான பந்தல்கால் விழாவும் இன்று நடைபெற்றது. கட்சித் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து, நீண்ட மடல் ஒன்றையும் நடிகர் விஜய் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் சென்னையில் நிருபர்களை சந்தித்த பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை, த.வெ.க., ஒரு குட்டி திராவிட கட்சியாக தான் இருக்கிறது என்று விமர்சித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது; தமது மாநாடு அழைப்பு கடிதத்தில் மற்ற கட்சிகளை போல நாம் சாதாரண கட்சி அல்ல என்று கூறி இருக்கிறார். உங்கள் கட்சி புதிய கட்சி, அதை உயர்வாக சொல்வதில் தவறில்லை. அதே சமயத்தில் மற்ற கட்சிகளையும், அதன் தலைவர்களையும் மதிக்க வேண்டும்.

ஒரு குட்டி திராவிடக்கட்சியை போலத்தான் விஜய் கட்சியும் இருக்கிறது. ஈ.வெ.ரா.,வை கும்பிடுகிறார்கள், கடவுளையும் கும்பிடுகிறார்கள். நேரம்காலம் பார்த்து தான் எல்லாவற்றையும் செய்கிறார்கள். அதாவது தி.முக., எதை செய்கிறதோ அதுபோல விஜய்யின் த.வெ.க.,வும் செய்கிறது.

இவ்வாறு தமிழிசை கூறினார்.





நன்றி


சென்னையில் நிருபர்களிடம் பேசிய தமிழிசை, சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார். சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிகளுக்காக மத்திய அரசு தரப்பில் ரூ.7,425 கோடி, தமிழக அரசு தரப்பில் ரூ.22,228 கோடியும், பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மூலம் மாநில அரசின் உத்தரவாதத்தில் கடனாக ரூ.33,593 கோடியும் பெறப்படும். இவை மொத்தமும் சேர்ந்து தான் ரூ.63,246 கோடி ஆகும் என்று தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

Advertisement