கோவா-வடகிழக்கு 'டிரா': ஐ.எஸ்.எல்., கால்பந்தில் 'விறுவிறு'

கோவா: கோவா, வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதிய ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டி 3-3 என 'டிரா' ஆனது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. கோவாவில் நடந்த லீக் போட்டியில் வடகிழக்கு யுனைடெட், கோவா அணிகள் மோதின. ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் வடகிழக்கு அணியின் நெஸ்டர் அல்பியாச், முதல் கோல் அடித்தார். இதற்கு 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (45+2வது நிமிடம்) கோவா அணிக்கு கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் அர்மாண்டோ சாதிகு, ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். முதல் பாதி முடிவு 1-1 என சமநிலையில் இருந்தது.
தொடர்ந்து அசத்திய சாதிகு, 47 வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து 2-1 என முன்னிலை பெற்றுத்தந்தார். ஆனால் இது, நிலைக்கவில்லை. ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் எழுச்சி கண்ட வடகிழக்கு அணிக்கு அல்பியாச், 2வது கோல் அடித்து கைகொடுத்தார். தொடர்ந்து அசத்திய வடகிழக்கு அணிக்கு 56வது நிமிடத்தில் அலாதீன் அஜாரை ஒரு கோல் அடித்தார்.
'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+4வது நிமிடம்) எழுச்சி கண்ட கோவா அணிக்கு போர்ஜா ஹெர்ரேரா ஒரு கோல் அடித்தார். ஆட்டநேர முடிவில் போட்டி 3-3 என 'டிரா' ஆனது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

Advertisement