படூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவர் நியமிக்க வலியுறுத்தல்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட படூர் கிராமத்தில் அரசு ஆரம்ப
சுகாதார நிலையம் இயங்குகிறது. சுற்றுவட்டாரத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் என, தினமும் 300 பேர் சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கு வருகின்றனர்.
இந்த சுகாதர நிலையத்தில், ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளதால், நோயாளிகளுக்கு போதுமான சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது.

மேலும், மருத்துவர் விடுமுறை எடுக்கும் நாட்களிலும், மாற்று மருத்துவராக வேறு சுகாதார நிலையங்களுக்கு செல்லும் சமயங்களிலும், செவிலியர்கள் சிகிச்சை அளிக்கும் நிலை உள்ளதாக தெரிகிறது.

மேலும், நீரழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகளுக்கு காலையில் வந்தால், நேரத்திற்கு பரிசோதனை மற்றும் முடிவுகள் கிடைக்காமல் மதியம் வரை காத்திருக்கும் நிலை உள்ளது. சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த நோய்க்கு சமயங்களில் போதுமான மருந்து மாத்திரைகள் இருப்பு இல்லை.

மேலும், சுகாதார ஊழியர்கள் பணியிடமும் போதுமான அளவு இல்லை என, சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் புலம்பி வருகின்றனர்.

எனவே, படூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, கூடுதலாக மருத்துவர் நியமிப்பதோடு, காலியாக உள்ள ஆய்வக பணியாளர் பணி இடம் போன்றவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நோயாளிகள் தெரிவித்தனர்.

Advertisement