இஸ்ரேலை வேரோடு அழிப்போம் : ஈரான் தலைவர் காமெனி ஆவேசம்

டெஹ்ரான் : இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான் ராணுவத்துக்கு, அந்நாட்டின் உயரிய தலைவர் அயதுல்லா அலி காமெனி நேற்று பாராட்டு தெரிவித்தார். தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாகவும், யூதர்களை வேரோடு அழிப்போம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

மேற்காசிய நாடான பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேலுக்கும் நடந்து வரும் போரில், ஹமாஸ் படைக்கு ஆதரவாக லெபனானின் ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள் களம் இறங்கினர்.

இதை தொடர்ந்து, லெபனான் மீது கடுமையான வான்வழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது.

5 ஆண்டுக்கு பின்

ஹெஸ்பொல்லா அமைப்பின் தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லா உட்பட, முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது 180க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை அதிரடியாக வீசி தாக்கியது.

இந்நிலையில், டெஹ்ரானில் உள்ள பிரதான வழிபாட்டு தலமான மொசல்லா மசூதியில், நேற்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈரான் நாட்டின் உயரிய தலைவர் அயதுல்லா அலி காமெனி, 80, பங்கேற்றார்.

ஈரான் புரட்சிப்படையின் தளபதி காசிம் சுலைமானி, 2020ல் ஆப்கானிஸ்தானின் பாக்தாத் நகரில் அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த போது, பொது மக்கள் மத்தியில் தோன்றி காமெனி உரையாற்றினார்.

ஐந்தாண்டுகளாக ஈரான் மக்கள் முன் தோன்றாத அவர், நேற்றைய தொழுகையில் பங்கேற்று 40 நிமிடங்கள் உரையாற்றினார். காமெனியை காண திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் முன் அவர் பேசியதாவது:

இஸ்ரேல் மீது நம் ராணுவத்தினர் நடத்திய ஏவுகணை தாக்குதல் சர்வதேச சட்டம், நாட்டின் சட்டம் மற்றும் இஸ்லாமிய நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது. அதிரடியாக இந்த தாக்குதலை நடத்தி முடித்த நம் ராணுவத்தினருக்கு பாராட்டுக்கள்.

ஆப்கானிஸ்தான் முதல் ஏமன் வரை, ஈரான் முதல் காசா வரை நம் எதிரிகளை அழித்தொழிக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

மீண்டும் தாக்குவோம்

லெபனான் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள துணிச்சலான போராளிகளே, விசுவாசமும் பொறுமையும் உள்ள மக்களே, இந்த தியாகங்களும் சிந்தப்பட்ட ரத்தமும் உங்கள் உறுதியை அசைக்கக் கூடாது. உங்களை மேலும் விடாமுயற்சியுடன் இருக்கச் செய்ய வேண்டும்.

சையத் ஹசன் நஸ்ரல்லா இப்போது நம்முடன் இல்லை. அவரது ஆன்மா நம்மை வழிநடத்தும். இஸ்ரேலுக்கு எதிராக உறுதியுடன் நின்ற அவரது தியாகம் நமக்கு உத்வேகத்தை அளிக்கும். அவரது இழப்பு வீண் போகாது. அசைக்க முடியாத நம்பிக்கையுடன் எதிரியை வீழ்த்த வேண்டும்.

ரத்தத்தில் தோய்ந்த லெபனான் மக்களுக்கு உதவுவதும், லெபனானின் ஜிஹாத் மற்றும் அல்-அக்ஸா மசூதிக்கான போரை ஆதரிப்பதும் அனைத்து முஸ்லிம்களின் கடமை.

கடந்த ஆண்டு அக்., 7ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் மிகச் சரியானது. ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடும் பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மக்களை ஒடுக்க, சர்வதேச சட்டத்துக்கு உரிமை இல்லை.

தேவைப்பட்டால், இஸ்ரேல் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். அமெரிக்க கைக்கூலிகளான யூதர்களை இஸ்ரேல் மண்ணில் இருந்து அகற்ற வேண்டும். அவர்களை வேரோடு அழித்து ஒழிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement