தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் மதுரை கோட்டத்தில் இயக்க திட்டம்

புதுக்கோட்டை:பாம்பனில் புது தூக்கு பால பணிகள் முடிவடைந்து, பாதுகாப்பு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. விரைவில், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மதுரை கோட்டத்தில் தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது என புதுக்கோட்டையில், தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீவத்சவா தெரிவித்தார்.

புதுக்கோட்டை ரயில் நிலையம் அம்ரித் திட்டத்தின் கீழ் எட்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மேம்பாட்டு மற்றும் அடிப்படை வசதி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தென்னக ரயில்வே, மதுரை கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீவத்சவா நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மதுரை கோட்டத்தில் அம்ரித் திட்டத்தின் கீழ் 15 ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு, மேம்பாட்டு பணிகள், பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் ஆகியவை நடைபெற்று வருகிறது.

இந்தியா முழுவதும் அம்ரித் திட்டத்திற்கு நடைபெற்று வரும் பணிகள் ஆங்காங்கே ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மதுரை கோட்டத்தில் நடைபெறும் பணிகள் குறித்து, ஆய்வு செய்து வருகிறேன். இதில், சில ரயில் நிலையங்கள் பெரிய அளவில் தரம் உயர்த்தப்பட உள்ளது. சில ரயில் நிலையங்கள் சிறிய அளவில் தரம் உயர்த்தப்பட உள்ளன. இந்தப்பணிகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பாம்பன் ரயில் நிலையத்தில் புதிய தூக்கு பாலம் பணிகள் நிறைவடைந்து, பாதுகாப்பு குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வு பணி முடிவு வந்தபின் விரைவில் பாம்பன் புதிய தூக்கு பாலம் திறக்கப்படும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்னக ரயில்வே கூடுதல் ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை கோட்டத்திலும், பல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. வட இந்தியாவில் இருந்து வரும் ரயில்கள், புதுக்கோட்டை மார்க்கமாக இயக்குவதற்கு தென்னக ரயில்வே, ஆலோசனைகள் செய்து வருகிறது.

இவ்வாறு கூறினார்.

Advertisement