'எஸ்.சி., - எஸ்.டி., இட ஒதுக்கீட்டில் மாநிலங்களின் உள் ஒதுக்கீடு செல்லும்' சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி, 'எஸ்.சி., - எஸ்.டி., சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது' என, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பான சீராய்வு மனுக்களை நேற்று தள்ளுபடி செய்தது.

'கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது' என, கடந்த ஆக., 1ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, பீலா திரிவேதி, கவாய், விக்ரம் நாத், பங்கஜ் மிட்டல், சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. நீதிபதி பெலா எம்.திரிவேதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர். அதில், 'ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டது.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, 'இந்த வழக்கில் அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பு சரியானது. பட்டியலினத்தவர்களில் மிகவும் பின்தங்கியவர்களுக்கு மாநில அரசுகள் உள் ஒதுக்கீடு வழங்கலாம். தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்களில் எந்த முகாந்திரமும் இல்லை.

'எனவே, அவற்றை மறுஆய்வு செய்வதற்கான தேவை ஏற்படவில்லை. இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன' என, அவர்கள் உத்தரவிட்டனர்.

Advertisement