டயர் வெடித்ததால் திடீரென பள்ளத்தில் பாய்ந்த அரசு பஸ்

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் போக்குவரத்து கழக பணிமனையைச் சேர்ந்த அரசு பஸ், மாவிலோடையில் இருந்து புறப்பட்டு விளாத்திகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

பஸ்சில், 30க்கும் மேற்பட்ட பயணியர் இருந்தனர். கார்த்திக் என்ற தற்காலிக டிரைவர் பஸ்சை ஓட்டிச் சென்றார். கரிசல்குளம் என்ற கிராமம் அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தில் பஸ் இறங்கியது.

பயணியர் அனைவரும் காயங்களின்றி உயிர் தப்பினர். விளாத்திகுளம் போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் அரசு போக்குவரத்து கழகம் விளாத்திகுளம் பணிமனையைச் சேர்ந்த அதிகாரிகள் பயணியரை மீட்டனர். அவர்களே வேறு ஒரு பஸ்சில் விளாத்திகுளத்திற்கு அனுப்பி வைத்தனர்.

பயணியர் சிலர் கூறியதாவது:

விபத்தில் சிக்கிய அரசு பஸ் உட்பட, விளாத்திகுளம் போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து கிராமப்புற வழித்தடங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. தரமற்ற டயர்கள் மற்றும் இருக்கைகளுடன் தான் இயக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement