தென்பெண்ணை ஆற்றில் விடப்பட்ட நாட்டு இன மீன் குஞ்சுகள்

தென்பெண்ணை ஆற்றில் விடப்பட்ட
நாட்டு இன மீன் குஞ்சுகள்
போச்சம்பள்ளி, அக். 5-
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பாருர் தென்பெண்ணை ஆற்றில் மீன் வளம், மீனவர் நலத்துறை சார்பில், அழிந்து வரும் விளிம்பில் உள்ள நாட்டு இன மீன்களை பாதுகாத்து அதை பெருக்கும் வகையில், தென்பெண்ணை ஆற்றில் நேற்று, 1.80 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது.
இதில் ரோகு, கட்லா, மிருகால், கால்பாசு, சேல்கெண்டை உள்ளிட்ட ரகங்களை கொண்ட நாட்டு இன மீன் குஞ்சுகளை மீன்வளம், மீனவர் நலத்துறை துணை இயக்குனர் சுப்பிரமணி, உதவி இயக்குனர் ரத்தினம், மீன் இன்ஸ்பெக்டர்கள் கதிர்வேல், பவதாரணி உள்ளிட்டோர் தென்பெண்ணை ஆற்றில் விட்டனர். 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மீன்வள துணை இயக்குனர் சுப்பிரமணி கூறுகையில்,''அழிந்து வரும் நாட்டு இன மீன் இனத்தை பெருக்கவும், அடித்தட்டு மக்கள் ஆறுகளில் வளரும் மீன்களை பிடித்து அவர்களின் புரதச்சத்து நிறைந்த உணவுகளை பெரும் நோக்கத்தில், நான்கு லட்சம் நாட்டின மீன் குஞ்சுகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றிலும், காவேரி ஆற்றில் பிலிகுண்டுலு பகுதியிலும் விடப்படும்,'' என்றார்.

Advertisement