மாணவிக்கு தவறான மருந்து இழப்பீடு வழங்க உத்தரவு

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் பழனி சஞ்சய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற கல்லுாரி மாணவிக்கு, வேறு ஒருவரின் மருந்து சீட்டை தவறாக வழங்கிய மருத்துவமனை நிர்வாகம், மாணவிக்கு 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பழனி காமராஜர் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி ஷேக் மைதீன், 45, மகள் அப்ரா பர்வீன், 22. பழினியில் உள்ள கல்லுாரியில் படிக்கிறார். இவருக்கு, கடந்த பிப்ரவரியில் உடல் நலம் சரியில்லாமல் போனது. பெற்றோர் பழனி சஞ்சய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பரிசோதித்த டாக்டர்கள் இவருக்கு கொடுக்க வேண்டிய மருந்து சீட்டிற்கு பதிலாக வேறு ஒருவரது மருந்துச்சீட்டை கவனக்குறைவால் மாற்றி கொடுத்தனர். அதன்படி, மருந்துகளை வாங்கி சாப்பிட்ட மாணவிக்கு மீண்டும் உடல் நலம் பாதித்தது. பின், பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தார்.

ஷேக் மைதீன் திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த ஆணையத்தலைவர் சித்ரா, பாதிக்கப்பட்ட கல்லுாரி மாணவிக்கு நஷ்ட ஈடாக 1 லட்சம் ரூபாய், வழக்கு செலவாக 5,000 ரூபாயை வழங்க, அந்த தனியார் மருத்துவமனைக்கு உத்தரவிட்டார்.

Advertisement