ஈரானின் அணு ஆயுதங்கள் மீது தாக்குதல்: இஸ்ரேலை தூண்டிவிடும் டிரம்ப்

22

வாஷிங்டன்: '' ஈரானின் அணு ஆயுதங்கள் மீது முதலில் இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும். மற்றதை பிறகு பார்த்து கொள்ளலாம்,'' என குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் கூறியுள்ளார்.


பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேலுக்கும் நடந்து வரும் போரில், ஹமாஸ் படைக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் களம் இறங்கினர். இதனை தொடர்ந்து லெபனான் மீது கடுமையான விமான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது. இதில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உட்பட முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர்.

இதனால், ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது 180க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை அதிரடியாக வீசி தாக்கியது. இதற்காக அந்நாட்டு ராணுவத்துக்கு ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமெனி பாராட்டு தெரிவித்து உள்ளார். இதற்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராகி வருகிறது. இதனால், பதற்றம் மேலும் அதிகரித்து காணப்படுகிறது. ஈரானின் அணு ஆயுத இடங்களில் தாக்குதல் நடத்த வேண்டாம் என இஸ்ரேலை அமெரிக்க அதிபர் பைடன் அறிவுறுத்தி உள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டிரம்ப் கூறியதாவது: இஸ்ரேல் முதலில் ஈரானின் அணு ஆயுதங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும். பிறகு மற்றதை பார்த்து கொள்ளலாம். அவர்கள் செய்வார்கள் என்றால் நிச்சயம் செய்வார்கள். இவ்வாறு டிரம்ப் கூறினார்.

Advertisement