இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு ரூ.24 கோடி இழப்பு; தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சி

3

புதுடில்லி: ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இந்திய ஒலிம்பிக் சங்கம் மேற்கொண்ட ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தினால் ரூ.24 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, சி.ஏ.ஜி., தணிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளது.


சி.ஏ.ஜி., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்திய ஒலிம்பிக் சங்கம், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் (2022, 2026), காமன்வெல்த் விளையாட்டு (2022, 2026), 2024 பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் 2028 ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்த ஒப்பந்தம் செல்லுபடி ஆகும்.

இதன்படி போட்டி நடக்கும் விளையாட்டு கிராமங்களில் 'இந்தியா ஹவுஸை' கட்டுவதற்கும் காட்சிப்படுத்துவதற்கும் ரிலையன்ஸ் இந்தியா நிறுவனத்திற்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 5, 2023 அன்று ஒரு திருத்தப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் (2026, 2030) மற்றும் இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுகள் (2026, 2030) ஆகியவற்றின் கூடுதல் உரிமைகளும் வழங்கப்பட்டது. இப்படி புதிய போட்டிகளுக்கான உரிமை வழங்கப்பட்டதால் 59 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும்.

ஆனால் ஸ்பான்சர் ஓப்பந்தம் ரூ.35 கோடிக்கு மட்டுமே போடப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு ரூ.24 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பதிலளிக்குமாறு இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

இவ்வாறு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் உஷாவின் நிர்வாக உதவியாளர் அஜய் குமார் நரங் கூறியதாவது:

டெண்டரில் உள்ள குறைபாடு காரணமாக, ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தது.

ஸ்பான்சர்களின் பெயரை, விளையாட்டு கிராமங்களில் உருவாக்கப்படும் இந்தியா ஹவுசில் காட்சிப்படுத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அனுமதி வழங்கி இருந்தது.
ஆனால் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நிலையில், அந்த அனுமதியை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ரத்து செய்துவிட்டது.

இதனால் தங்கள் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படுவதாக ரிலையன்ஸ் நிறுவனத்தினர் முறையிட்டனர்.அதன் அடிப்படையில் கூடுதலான போட்டிகளுக்கு உரிமை வழங்கப்பட்டது.இவ்வாறு அஜய் குமார் நரங் கூறினார்.


இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொருளாளர் சஹ்தேவ் யாதவ் கூறியதாவது:
கோடைகால ஒலிம்பிக்குடன் ஒப்பிடும்போது குளிர்கால ஒலிம்பிக் மற்றும் இளையோர் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பங்கேற்பு மிகக் குறைவு.
இருப்பினும், ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யப்படும்போது நிர்வாகக் குழு மற்றும் ஸ்பான்சர்ஷிப் கமிட்டி கலந்தாலோசிக்கப்படவில்லை.
இவ்வாறு சஹ்தேவ் யாதவ் கூறினார்.

Advertisement