கல்லுாரியில் ஹாஸ்டல் திறக்கல...! கொந்தளித்த இடுக்கி மருத்துவ மாணவர்கள்!

இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கி அரசு மருத்துவ கல்லுாரியில், மாணவ, மாணவிகளுக்கான புதிய தங்கும் விடுதி திறப்பு விழா கண்டும், இயங்காமல் உள்ளதாக, அந்த கல்லுாரி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

கடந்த மாதம்(செப்.23) மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், இடுக்கி மருத்துவ கல்லுாரியில் உள்ள மாணவர்களுக்கான, தங்கும் விடுதியை திறந்து வைத்தார்.

ரூ.92 கோடியில் கட்டப்பட்டுள்ள அந்த புதிய விடுதி கட்டிடத்தில், மாணவர்கள் தங்கும் விடுதி, பணியாளர் விடுதிகள், லேப், பயிற்சி அரங்கம் ஆகியவை உள்ளன.


இது குறித்து மாணவ, மாணவிகள் கூறியதாவது: மாணவ விடுதி, திறப்பு விழா நடத்தி ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டது. இன்னும் எங்களை விடுதியில் தங்க அனுமதிக்கவில்லை. கேட்டால், இன்னும் பணிகள் முடிக்கப்படாமல் இருக்கிறது என்கிறார்கள்.


தற்போது, ஆண்கள் தங்கும் விடுதி கட்டிடத்தின் ஒரு பகுதியில், பெண்கள் தங்கி உள்ளனர். அதனால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதிய விடுதி கட்டிடத்தில் இன்னும் பாத்ரூம் பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை, இன்னும் 100க்கும் மேலான மாணவர்கள் வர இருப்பதால், தங்க இடம் இல்லாமல், மேலும் நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.
இதனால் பணிகளை, விரைவாக முடித்து, தங்கும் விடுதியை திறக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை, அதற்குதான் நாங்கள் போராடுகிறோம் என்றனர்.

இது குறித்து கல்லுாரி முதல்வர் டோமி மப்பலக்கயில் கூறியதாவது:

25 நாட்களில், விடுதிக்கு தேவையான உபகரணங்கள் வந்துவிடும். மாணவ விடுதியின் முக்கியமான பணிகள் நிறைவு பெற்றது. ஹாஸ்டல் சுற்றுச்சுவர், டைல்ஸ் பணிகள், ஒரு பாத்ரூம் வளாகம் பணிகள் முடிந்துவிட்டது. 90 நாட்களில் அனைத்து பணிகளும் முடிந்துவிடும். பழைய விடுதியில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களையும் புதிய விடுதிக்கு மாற்றி விடுவோம். புதிய விடுதியில் 1150 அறைகள் உள்ளன.

இவ்வாறு கல்லுாரி முதல்வர் கூறினார்.

Advertisement