பா.ஜ., எம்.எல்.ஏ., காலில் விழுந்த டில்லி அமைச்சர்: கெஜ்ரிவால் பெருமிதம்

1

புதுடில்லி: டில்லி அரசு பஸ்களில் மார்ஷலாக பணியாற்றும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பா.ஜ., எம்.எல்.ஏ., காலில் அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் காலில் விழுந்தார். இதற்காக அவருக்கு கெஜ்ரிவால் பாராட்டு தெரிவித்துள்ளார்.


பஸ் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில் 2015ம் ஆண்டு பஸ் பாதுகாவலர்கள் என்ற பெயரில் தன்னார்வலர்களை ஆம் ஆத்மி அரசு பணியில் அமர்த்தியது. ஆனால், 2023ம் ஆண்டு மாநில நிதி மற்றும் வருவாய்த்துறை இது குறித்து கேள்வி எழுப்பியதால் சர்ச்சை எழுந்தது. பேரிடர் காலங்களில் தான் அவர்களை பணியில் அமர்த்த வேண்டும். போக்குவரத்து சேவைக்கு பயன்படுத்தக்கூடாது எனக்கூறியது. இதனையடுத்து 2023ம் ஆண்டு நவ., மாதம் 10 ஆயிரம் பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்கள் மீண்டும் பணி கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த விவகாரத்தில் பா.ஜ., மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகின்றனர். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் டில்லி கவர்னர் இல்லத்தை முற்றுகையிட போவதாக அறிவித்து பேரணியாக சென்றனர். அவர்களுக்கு ஆதரவாக ஆம் ஆத்மி கட்சியினரும் களமிறங்கினர். இதனையடுத்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.


இதனிடையே, போராட்டத்திற்கு இடையே, பா.ஜ., எம்.எல்.ஏ., விஜேந்தர் குப்தா காலில், மாநில அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் விழுந்தார்.
இதன் பிறகு அவர் கூறுகையில், ''பஸ் ஊழியர்கள் விவகாரத்தில் கவர்னரை நேற்று நாங்கள் சந்தித்தோம். அப்போது ஒரு பா.ஜ., எம்.எல்.ஏ.,கூட வரவில்லை. இந்த விவகாரத்தில் அவர்கள் பல்டி அடித்துள்ளனர். அவர்களுக்கு கவர்னர் நேரம் கொடுக்கவில்லையா அல்லது பஸ் ஊழியர்கள் விவகாரத்தில் பா.ஜ.,வினருக்கு அக்கறை இல்லையா என்பது தெரியவில்லை,'' என்றார்.

இதனிடையே, சவுரப் பரத்வாஜை பாராட்டி ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான கெஜ்ரிவால் ' எக்ஸ் ' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: மக்களுக்கான பணி தடையில்லாமல் நடக்க வேண்டும் என்பதற்காக, யார் காலிலும் விழும் அமைச்சர் சவுரவ் பரத்வாஜை பாராட்டுகிறேன். இனிமேலாவது, இந்த விவகாரத்தில் கவர்னரும், பா.ஜ.,வும் அரசியல் செய்யாமல், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை வேலையில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Advertisement