ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் வெற்றி: 'டி-20' உலக கோப்பையில்

சார்ஜா: பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்றன.

ஐ.சி.சி., சார்பில் பெண்களுக்கான 9வது 'டி-20' உலக கோப்பை தொடர், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. சார்ஜாவில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இலங்கை அணிக்கு ஹர்ஷிதா (23), நிலாக் ஷிகா (29*) ஓரளவு கைகொடுத்தனர். 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 93 ரன் எடுத்தது. ஆஸ்திரேலியா சார்பில் மேகன் ஷட் 3 விக்கெட் சாய்த்தார்.

சுலப இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி (4), எல்லிஸ் பெர்ரி (17), ஆஷ்லீக் கார்ட்னர் (12) ஆறுதல் தந்தனர். பெத் மூனே (43*) அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 14.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 94 ரன் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அசத்தல்
சார்ஜாவில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் இங்கிலாந்து, வங்கதேசம் அணிகள் மோதின.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இங்கிலாந்து அணிக்கு மையா பவுச்சியர் (23), டேனி வியாட்-ஹாட்ஜ் (41) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. இங்கிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 118 ரன் எடுத்தது. வங்கதேசம் சார்பில் நஹிதா, பஹிமா, ரிது மோனி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு சோபனா (44) நம்பிக்கை தந்தார். கேப்டன் நிகர் சுல்தானா (15) நிலைக்கவில்லை. வங்கதேச அணி 7 விக்கெட்டுக்கு 97 ரன் மட்டும் எடுத்து, 21 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இங்கிலாந்து சார்பில் லின்சி ஸ்மித், சார்லி டீன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Advertisement