மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசின் பங்களிப்பு 65 % நிதி அமைச்சகம் விரிவான விளக்கம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்திருந்தது. இதில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி பங்களிப்பு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் வெளியாகின. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய நிதியமைச்சகம் விரிவான விளக்கம் அளித்துள்ளது.

மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. மூன்று வழித்தடங்களில் நிறைவேற்றப்படும் இந்த திட்டம், 63,246 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட உள்ளது.

பங்களிப்பு



இது, மாநிலத்தின் திட்டமாக இதுவரை செயல்படுத்தப்பட்டு வந்தது. இனி, மத்திய அரசு திட்டமாக செயல்படுத்தப்படும். அதாவது, திட்டத்துக்கான நிதியில் இதுவரை, 90 சதவீதத்தை தமிழக அரசு ஏற்பதாக இருந்தது.

நிலத்தின் மதிப்பு உட்பட சில குறிப்பிட்ட செலவுகளை தவிர, மீதமுள்ள 10 சதவீத திட்டச்செலவை மத்திய அரசு செய்வதாக இருந்தது.

இந்த திட்டத்துக்காக, தமிழக அரசுக்கு தேவையான, 32,548 கோடி ரூபாய் கடன், பன்னாட்டு நிதி அமைப்புகளுடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெறப்பட்டது. அதில், 6,100 கோடி ரூபாய் ஏற்கனவே செலவிடப்பட்டுள்ளது.

தற்போது, இந்த திட்டம் மத்திய அரசு திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கு தேவையான, 7,425 கோடி ரூபாய் சமபங்கு மற்றும் மற்ற தொடர்புடைய கடன் அடங்கிய, 33,593 கோடி ரூபாய் அளவுக்கான முழு கடன் உட்பட, மத்திய அரசின் பங்களிப்பு, 65 சதவீதமாக இருக்கும்.

மீதமுள்ள 35 சதவீத நிதியை மட்டும் மாநில அரசு மேற்கொள்ள தர வேண்டும்.

பன்னாட்டு நிதி அமைப்புகளிடம் இருந்து இதுவரை பெறப்பட்ட கடன்கள், இனி மத்திய அரசின் கடன்களாக கருதப்படும். அந்த நிதி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு, மத்திய அரசின் பட்ஜெட்டில் இருந்து நேரடியாக ஒதுக்கப்படும்.

சமீபத்திய ஒப்புதலுக்கு முன், கடன்களை பெறுவது, அதை திருப்பி செலுத்துவது உள்ளிட்டவை மாநில அரசின் பொறுப்பாக இருந்தது. தற்போது திட்டத்தை மத்திய அரசு ஏற்றுள்ளதால், 33,593 கோடி ரூபாய் அளவுக்கு மாநில அரசுக்கு நிதிச்சுமை குறைந்துள்ளது.

பொறுப்பு



ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு அமைப்பு, ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, புதிய வளர்ச்சி வங்கி ஆகிய பன்னாட்டு நிதி அமைப்புகளுடன், தமிழக அரசு ஏற்கனவே செய்த ஒப்பந்தங்கள் மத்திய அரசுக்கு மாற்றப்படும்.

இதற்கான பேச்சுகளில் மத்திய அரசு நேரடியாக ஈடுபடும். இந்த மாற்றத்துக்கு தேவையான அனைத்து ஆவணங்களிலும் திருத்தம், மாற்றம் செய்யும் பணிகளில் நிதியமைச்சகம் ஈடுபடும்.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வாயிலாக செயல்படுத்தும் முகமையாக, மாநில அரசு இதுவரை இருந்தது.

இனி, மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் திட்டத்தை செயல்படுத்தும் முகமையாக இருக்கும்.

கடன்களை திருப்பி செலுத்துவது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பொறுப்பாகும். கடன் பெறுவதில் இருந்து, ஐந்து ஆண்டுகளுக்குப் பின், கடனை திரும்ப செலுத்த துவங்க வேண்டும்.

நிறுவனத்திற்கு, ஒருவேளை கடனை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால், அதற்கு தேவையான நிதி உதவியை செய்வது மாநில அரசின் பொறுப்பாக இருக்கும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

- நமது சிறப்பு நிருபர் -.

Advertisement