சனாதன தர்மத்தில் ஜாதி பாகுபாடு இல்லை வள்ளலார் விழாவில் கவர்னர் ரவி பேச்சு

சென்னை: “சனாதன தர்மத்தில் ஜாதி இல்லை; அனைவரும் சமம் என்பதை தான் கூறுகிறது,” என, கவர்னர் ரவி கூறினார்.

வள்ளலாரின் 201வது பிறந்த நாள் விழா மற்றும் திருஅருட்பா உரைநடை நுால் வெளியீட்டு விழா, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது.

வள்ளலாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, கவர்னர் மரியாதை செய்தார். பின், கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார்.

திருஅருட்பா உரைநடை நுாலை அவர் வெளியிட, சித்த மருத்துவர் பாலகிருஷ்ண தம்பையா பெற்றுக் கொண்டார்.

பின், கவர்னர் ரவி பேசியதாவது:

கடந்த 200 ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர்கள் நம் பண்பாடு மற்றும் கலாசாரத்தை அழிக்க முயற்சித்தபோது, வள்ளலார் தோன்றி மக்களை நல்வழிப்பபடுத்தினார். 2,000 ஆண்டுகளுக்கு முன்பே, நாயன்மார்களும், ஆழ்வார்களும் மக்களை நல்வழிப்படுத்தினர்.

தமிழகம் எப்போதும் புண்ணிய பூமியாக கருதப்படுகிறது. இந்தியாவின் ஆன்மிக தலைமையகமாக தமிழகம் இருக்கிறது. நாம் வெவ்வேறு உணவு, உடைகளில் வேற்றுமையுடன் இருக்கலாம். ஆனால், பாரதம் என்று வரும்போது அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்.

சனாதன தர்மத்தில் ஜாதி இல்லை. சிலர் சனாதன தர்மத்தை ஜாதியத்துடன் ஒப்பிடுகின்றனர். அனைவரும் சனாதன தர்மத்திற்கு உட்பட்டவர்கள் தான்.

ஜாதியை பேசக்கூடிய ஒருவன், சனாதனத்தை பின்பற்றக் கூடியவனாக இருக்க முடியாது. சனாதன தர்மத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன்; ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் கிடையாது. அனைவரும் சமம் என்று கூறுவதே சனாதனம்.

மஹாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்து, தமிழகத்தில் தான் தற்கொலைகள் அதிகம். இங்கே மக்களுக்கு போதிய நிம்மதி இல்லை. பொதுமக்கள் மிகுந்த மன அழுத்தத்துடனும், ஒருவருக்கொருவர் தங்களுக்குள்ளேயே போர் நடத்தி, நிம்மதி இல்லாமலும் வாழ்ந்து வருகின்றனர்.

மத்தியில் நடக்கும் ஆட்சி, வள்ளலாரின் கருத்துகளின் அடிப்படையில் நடக்கிறது.

எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டுமென்ற கொள்கையில், பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டு களாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அரசாக நரேந்தர மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னாள் எம்.எல். ஏ.,வும், தமிழ்நாடு தன்னுரிமை கழக தலைவருமான பழ.கருப்பையா பேசியதாவது:

காந்திக்குப் பின் நான் வள்ளலாரை படித்தேன். இப்படி எல்லாம் ஒருவர் மனித குலத்தில் வாழ முடியுமா என வியப்படைந்தேன்.

புலால் இல்லாமல், ஒரு நாள் ஒரு பொழுதும் கூட நான் உணவு உண்டதே இல்லை. இறைச்சிகளை தேடித் தேடி உண்டேன். புறா, வான்கோழி ஆகியவற்றை தேடித் தேடி உண்டேன்.

மான் கறி உண்ண வழி இல்லாமல் போனதே என்று வருத்தப்பட்ட காலத்தில், வள்ளலார் எனக்குள்ளே வந்தார்.

புலால் உண்ணாதவர்களும், உயிரினங்களை கொல்லாதவர்களும், வள்ளலார் வழியில் சேர வேண்டும் என அவர் எண்ணினார். அதன் அடிப்படையில், நானும் வள்ளலார் வழியில் இணைந்தேன்.

'கருணையில்லா ஆட்சி கருகி ஒழிக... அருள் நயர்ந்த நன்மார்க்கர் ஆள்க' என வள்ளலார் கூறியுள்ளார். நல்லவர்கள் வாழ வேண்டு மென்றால் நல்லாட்சி இருக்க வேண்டும் என, வள்ளலார் கூறுகிறார். அதன் வழியில், கருணையில்லா ஆட்சி கருகி ஒழியட்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

'சமத்துவ நெறியை போற்றுவோம்!'

தி.மு.க., அரசு ஆட்சி பொறுப்பேற்ற ஆண்டு முதல், 'தனிப்பெருங்கருணை நாள்' எனக் கொண்டாடி வரும் அருட்பிரகாச வள்ளலாரின் பிறந்த நாள் இது. 'உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்; மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்' என, அவர் காட்டிய சமரச சுத்த வழியை எந்நாளும் பின்பற்றுவோம். உயிர்களிடத்து வேற்றுமையும், ஏற்றத்தாழ்வும் காணாத சமத்துவ நெறியை போற்றுவோம்; வாழ்க வள்ளலார்.- ஸ்டாலின், தமிழக முதல்வர்

Advertisement