பல சாதனைகளை செய்தவர் டி.வி.ஆர்.,

சிதம்பரம்: ''ஆடம்பரம் இல்லாமல், மக்களின் நலனுக்காக பல சாதனைகளை செய்துள்ளார் டி.வி.ஆர்.,'' என, அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் ஞானகுமார் புகழாரம் சூட்டினார்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் சார்பில், 'தினமலர்' நாளிதழ் நிறுவனர் டி.வி.ஆரின், 116வது பிறந்த நாள் விழாவையொட்டி, அரசு பள்ளி மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, அண்ணாமலை பல்கலைக்கழக கால்நடை பண்ணைக்கு தீவனம் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.

சிதம்பரம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் நடந்த நிகழ்ச்சிக்கு, பேராசிரியர் லதா தலைமை தாங்கினார்.

அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஞானகுமார், ஏழிசை வல்லபி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினர்.

விழாவில், 'தினமலர்' நிறுவனர் டி.வி.ஆர்., உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பேராசிரியர் ஞானகுமார் பேசியதாவது:

காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட டி.வி.ஆர்., பின்தங்கிய மக்களின் உயர்வுக்காக தொண்டாற்றினார். சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்ற வலியுறுத்தி தலையங்கம் எழுதினார். ஆடம்பரம், விளம்பரம் இல்லாமல் பல சாதனைகளை நிகழ்த்தினார்.

மாணவ - மாணவியரின் கல்வி அறிவை மேம்படுத்த அரசு பொதுத்தேர்வு எழுதும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மாதிரி வினா விடை பகுதியை துவங்கினார். தமிழ் மற்றும் தமிழரின் நலனுக்காக டி.வி.ஆர்., தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.

இவ்வாறு அவர் பேசினார்.

கார்த்திக் ராஜா நன்றி கூறினார்.

Advertisement