போக்சோவால் பறிபோனது தேசிய விருது; ஜானிக்கு விழுந்த அடுத்த அடி!

1

புதுடில்லி: பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கான தேசிய விருது அறிவிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

திரைப்படத்துறையில் தனது நடன அசைவுகள் மூலம் அனைவர் கவனத்தையும் கவந்தவர் நடன இயக்குநர் ஜானி. ஜானி மாஸ்டர் என்று திரைத்துறையினரால் அழைக்கப்படும் அவரின் நடனம் மூலம் உருவான பாடல்களுக்கு ரசிகர்கள் அதிகம். விஜய் நடித்த 'ரஞ்சிதமே' பாடலுக்கு நடனம் அமைத்தவர் இவர் தான்.

திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்றிருந்த மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே என்ற பாடலின் நடனத்தை சிறப்பாக வடிவமைத்தார் என்பதற்காக அவருக்கும், சதீஷ் கண்ணனுக்கும் கூட்டாக தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருந்தது.

புகழ் உச்சியில் ஏற ஆரம்பித்த அவரின் பெயர், தம்மிடம் பணியாற்றிய பெண் நடன உதவியாளருக்கு பாலியல் வன்கொடுமை செய்தார் என்ற புகாரால் அதல பாதாளத்துக்கு சென்றது. இதன் எதிரொலியாக தலைமறைவாகி பெங்களூருவில் இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

தற்போது ஜாமினில் ஜானி மாஸ்டர் இருக்கும் நிலையில் அவருக்கு அறிவிக்கப்பட்ட சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருது அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் அமைப்பு அறிவித்துள்ளது. பாலியல் புகார், கைது நடவடிக்கை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் (அக்.8) புதுடில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற உள்ள தேசிய திரைப்பட விருது விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கோர்ட் வரை சென்று ஜானி மாஸ்டர் ஜாமின் பெற்றிருக்கிறார். அவருக்கு அக்டோபர் 6ம் தேதி முதல் அக்டோபர் 10ம் தேதி வரை கோர்ட் ஜாமின் வழங்கி இருந்தது.

தற்போது தேசிய விருது அறிவிப்பு திரும்ப பெறப்பட்டு உள்ளதால் ஜானி மாஸ்டருக்கான ஜாமினும் ரத்து செய்யப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

Advertisement