புதிய கட்சிகள் 2 ஆண்டுக்கு பின் காணாமல் போய்விடும்: சண்முகம்

செஞ்சி: 'புதிய கட்சிகள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு காணாமல் போய்விடும்' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசினார்.

விழுப்புரம் மாவட்டம், வல்லம் பகுதியில் நடந்த அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

தினமும் புதிது புதிதாக யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கின்றனர். அவர்கள் போய் விடுவார்கள். கமல் கட்சி ஆரம்பித்த உடன் அதோ வந்து விட்டார், இதோ வந்து விட்டார் என பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், என்ன நடந்தது. அதே போன்று, புதிய கட்சிகள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு காணாமல் போய்விடும்.

இதற்கு காரணம் இந்த கட்சிகளிடம் அடிப்படை கட்டமைப்பு கிடையாது. அ.தி.மு.க., தி.மு.க., என இரண்டு கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் அடிப்படை கட்டமைப்பு உள்ள கட்சிகள். நான் தேர்தலுக்கு முன்பே பா.ஜ., தி.மு.க., கூட்டணி வரும் என கூறினேன். இப்போது நடந்து விட்டது.

கடந்த 15 நாட்களுக்கு முன் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டுக்கு வந்தபோது மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நாங்கள் ஏன் பணம் தரவேண்டும். அது தமிழக அரசு சுயநிதியில் செய்து கொள்வதாக ஒப்பந்தம் போட்டுள்ளது என்றார். கடந்த வாரம் ஸ்டாலின் டில்லி சென்றார். பெரிய அய்யாவை பார்த்து கும்பிடு போட்டார். 45 நிமிடம் பேசினார். இப்போது நிர்மலா சீதாராமன் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு 65 சதவீதம் நிதியை தரும் என அறிக்கை விடுகிறார்.

பா.ஜ., -தி.மு.க., இடையே நேரடி உறவு உள்ளது. தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல் விழித்து கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு சண்முகம் பேசினார்.

Advertisement