இடதுசாரி பயங்கரவாதம் 2026ல் முற்றிலும் ஒழிக்கப்படும்: உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்!

7

புதுடில்லி: "வரும் 2026ம் ஆண்டுக்குள் நாட்டில் இடதுசாரி பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும்," என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

மாவோயிஸ்ட்கள் பாதிப்புள்ள மாநில முதல்வர்கள் மற்றும் மூத்த ஆதிகாரிகளுடன் இன்று நடந்த முக்கிய கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

மேம்பட்ட பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக, கடந்த லோக்சபா தேர்தலில், மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதியில், 70 சதவீதம் வரை அதிக வாக்காளர்கள் ஓட்டுபோட்டுள்ளனர். முன்னதாக இப்பகுதிகளில் பூஜ்ஜிய வாக்குப்பதிவுதான் இருந்தது.

முன்னர், பாதுகாப்புப் படைகள், தற்காப்பு நடவடிக்கை மட்டுமே மேற்கொண்டு வந்தனர். இப்போது தாக்குதல் நடவடிக்கைகளை, மேற்கொண்டு வருகின்றனர்.

சத்தீஸ்கர், ஒடிசா, தெலங்கானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், பீகார், ஆந்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மாவோயிஸ்டுகளால், பாதிக்கப்பட்டுள்ளன.

மோடி அரசின் உத்தியால், இடதுசாரி பயங்கரவாதம் 72 சதவீதம் குறைந்துள்ளது, 2010ம் ஆண்டை விட 2023ம் ஆண்டில் இறப்பு எண்ணிக்கை 86 சதவீதம் குறைந்துள்ளது.


பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலில், 2026 மார்ச் மாதத்திற்குள் இடதுசாரி பயங்கரவாத அச்சுறுத்தலை முற்றிலும் வேரறுக்க, மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.


இடதுசாரி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை இப்போது வெறும் 38 ஆக உள்ளது. பாதிக்கப்பட்ட மாநிலங்களின் தொலைதூரப் பகுதிகளுக்கு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு செல்வது, சாலை மற்றும் மொபைல் இணைப்புக்கு உத்வேகம் அளிப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Advertisement