கேரளாவுக்கு கனமழை எச்சரிக்கை!

திருவனந்தபுரம்; கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறி பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.



இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது; மாநிலத்தில் அக்டோபர் 10ம் தேதி வரை கனமழை பெய்யலாம். இடுக்கி மாவட்டத்துக்கு நாளை (அக்.8) ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மறுநாளும் (அக்.9), திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களுக்கு அக்டோபர் 10ம் தேதி ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், மலப்புரம், வயநாடு மாவட்டங்களுக்கு நாளை (அக்.8) மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. ஆலப்புழா, பாலக்காடு, கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

ஆறுகள், ஏரிகள் மற்றும் அணைகளின் அருகில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தற்காலிகமாக இடம்பெயர்ந்து விடுவது நல்லது. நீர்நிலைகள் அருகில் சென்று யாரும் செல்பி போட்டோக்கள் எடுக்கக்கூடாது.

அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியூர் செல்லக்கூடாது. மழை பற்றிய அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும் வரை நீர்வீழ்ச்சிகள், மலைகள், அருவிகள் உள்ளிட்ட வெளியிடங்களுக்கு யாரும் இன்பச்சுற்றுலா செல்ல வேண்டாம். இது போன்ற பகுதிகளுக்கு செல்வதை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும்.

இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisement