ஒற்றை படத்தால் வெடித்தது சண்டை; 'ஓலா'வுக்கு பேரிழப்பு ஏற்படுத்திய காமெடி நடிகர்!

3

புதுடில்லி: பிரபல நடிகரின் சமூக வலைதள பதிவால் பிரபலமான ஓலா நிறுவனத்தின் பங்குகள் சரிந்திருப்பது அந்நிறுவனத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.


ஓலா ஸ்கூட்டர்கள் சர்வீஸ் சென்டரில் அழுக்கு படித்து குப்பை போல குவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்த காமெடி நடிகர் குணால் கம்ரா, " இந்திய வாடிக்கையாளர்கள் மிகவும் பாவப்பட்டவர்கள், குரல் கொடுக்க எல்லாம் மாட்டார்கள். பைக் என்பது தினசரி ஊழியர்களின் வாழ்வாதாரம்," எனக் குறிப்பிட்டிருந்தார். அதோடு, ஓலா சர்வீஸில் உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருந்தால், இங்கே டேக் செய்து, அது பற்றி சொல்லுங்கள் என்றும் பதிவுட்டிருந்தார். மேலும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் ஓலா நிறுவன தலைவர் பவிஷ் அகர்வாலையும் டேக் செய்திருந்தார்.


இதனைப் பார்த்து கடுப்பான பவிஷ் அகர்வால், " உங்களுக்கு அவ்வளவு அக்கறை இருந்தால், இங்கே வந்து உதவி செய்யுங்கள். உங்களின் தோல்வியடைந்த காமெடி வாழ்க்கை சம்பாதிக்கும் பணத்தை விட கூடுதலாக பணம் தருகிறேன். அப்படியில்லை எனில் அமைதியாக உட்காருங்கள், வாடிக்கையாளர்களின் பிரச்னைகளுக்கு எங்களை கவனம் செலுத்த விடுங்கள்," எனக் குறிப்பிட்டிருந்தார்.


இதையடுத்து, நடிகர் குணால் கம்ரா மற்றும் பவிஷ் அகர்வாலுக்கு இடையே தொடர்ந்து எக்ஸ் தளத்தில் வார்த்தைப் போர் நீடித்து வந்தது. தொடர்ந்து, கடந்த 4 மாதங்களில் ஓலா ஸ்கூட்டர் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு முழு இழப்பீடு வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி வரையிலான வாடிக்கையாளர்களின் குறைகள் தீர்க்கப்பட்டு விட்டதா? என்றும் கேள்வி எழுப்பினார்.


தொடர்ந்து, பவிஷ் அகர்வாலும், நடிகர் குணால் கம்ராவும் வார்த்தை போரில் ஈடுபட்டு வந்தனர்.



இதனிடையே, ஓலா குறித்து நடிகர் குணால் கம்ரா தொடர்ந்து குற்றச்சாட்டுகளை குவித்து வரும் நிலையில், ஓலா நிறுவனத்தின் பங்குகள் 8 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. இது ஓலா நிறுவனத்தின் தலைவர் பவிஷ் அகர்வாலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement