அரசு பங்களாவில் இருந்த சோபா, ஏ.சி., எங்கே; தேஜஸ்வி மீது பா.ஜ., குற்றச்சாட்டு!

7

பாட்னா: அரசு பங்களாவை காலி செய்யும் போது, அதில் இருந்து பொருட்களை திருடிச் சென்று விட்டதாக, லாலு மகன் தேஜஸ்வி மீது பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது.


பாட்னாவின் நம்பர் 5 தேஷ்ரத்தன் சாலை அரசு பங்களாவில் முன்னாள் துணை முதல்வர் சுஷில் மோடி தங்கியிருந்தார். அதன் பிறகு, எதிர்க்கட்சி தலைவரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தங்கியிருந்தார். தற்போது அந்த பங்களா துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் விஜயதசமி அன்று அவர் குடிபெயர முடிவு செய்துள்ளார்.


இந்த நிலையில், அரசு பங்களாவில் இருந்த ஏ.சி., சோபாக்கள், லைட்டுகள், படுக்கைகள் உள்ளிட்ட பொருட்கள் மாயமாகி விட்டதாகவும், வீட்டை காலி செய்யும்போது, அவற்றை தேஜஸ்வி தரப்பினர் திருடிச் சென்று விட்டதாகவும் பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது.


"சுஷில் மோடி இந்த பங்களாவில் குடியிருக்கும் போது, ஹைட்ராலிக் படுக்கைகள், விருந்தினருக்கான சோபாக்கள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. இது மீடியாக்கள் உள்பட அனைவருக்கும் தெரியும். தற்போது, அந்தப் பொருட்களை காணவில்லை. 20.ஏ.சி.,க்கள் மாயமாகியுள்ளன. கணினி, இருக்கைகள், பிரிட்ஜ், லைட்டுகளை காணவில்லை. துணை முதல்வரின் பங்களாவில் பொருட்கள் திருடு போயுள்ளது," என்று துணை முதல்வர் சாம்ராட்டின் செயலாளர் சத்ருஹன் பிரசாத் கூறியுள்ளார்.


ஆனால்,குற்றச்சாட்டை மறுத்துள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினர், 'ஒப்படைக்கும்போது அரசு பங்களாவில் இருந்த, இருக்கும் பொருட்களின் விபரத்தை அரசு வெளியிட வேண்டும்' என்றும், 'அப்படி செய்யத் தவறினால், மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

Advertisement