9 மாதத்தில் 155 பேர் பலி; எலிக்காய்ச்சலால் கேரளாவில் கிலி!

1

திருவனந்தபுரம்; கேரளாவில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.



எலிகள் எங்கு எல்லாம் இருக்கிறதோ அங்கு எலிக்காய்ச்சல் இருக்கும். அசுத்தமான நீரில் லெப்டோஸ்பைரா என்ற நுண்ணுயிர் இருக்கும். இந்த தண்ணீரை குடிக்கும் போதோ அல்லது அசுத்தமான தண்ணீர் உடலில் படும்போதோ லெப்டோஸ்பைரா நுண்ணுயிர் தாக்கும்.

அப்படி பாதிக்கப்படும் எலிகளின் எச்சில், சிறுநீர் மூலம் மனிதர்களுக்கு லெப்டோஸ்பைரோசிஸ் என்ற காய்ச்சல் ஏற்படும். இந்த வகையான காய்ச்சலுக்கு எலிக்காய்ச்சல் (leptospirosis) என்று பெயர். இப்படிப்பட்ட காய்ச்சல் தான் இப்போது கேரளாவை பயமுறுத்தி வருகிறது.

இது குறித்து கேரள சுகாதாரத்துறை கூறியுள்ள தகவல்கள் வருமாறு; 2024ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி வரை 2,512பேர் லெப்டோஸ்பைரோசிஸ் தாக்குதலுக்கு ஆளாகினர். அவர்களில் 155 பேர் எலிக்காய்ச்சலால் தான் அதிகாரப்பூர்வமாக பலியாகி உள்ளனர். 1,979 பேர் சிகிக்சை எடுத்துக் கொண்டனர்.

மேலும் 133 மரணங்கள் எலிக்காய்ச்சல் தொடர்பான அறிகுறிகளால் இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்த காய்ச்சல் இன்னும் வேகமாக பரவி வருவதாக சுகாதாரத்துறையினர் கூறி உள்ளனர். எலிக்காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால் சுயமாக மருத்துவம் எடுத்துக் கொள்ள வேண்டாம். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு கேரள சுகாதாரத்துறை தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement