தீபா கர்மாகர் ஓய்வு * ஜிம்னாஸ்டிக்ஸ் அரங்கில் இருந்து..

புதுடில்லி: ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர் ஓய்வு பெற்றார்.
இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர் 31. திரிபுராவின் அகர்தலாவை சேர்ந்தவர். 2014, கிளாஸ்கோ, காமன்வெல்த் விளையாட்டில் வெண்கலம் வென்றார். ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்சில் (2016, ரியோ) பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை ஆனார். இதன் பின் முழங்கால் காயம், ஆப்பரேஷன் என அவதிப்பட்டார்.
2018ல் மீண்டு வந்த இவர், ஆர்ட்டிஸ்ட் ஜிம்னாஸ்டிக்ஸ் உலக கோப்பையில் தங்கம் கைப்பற்றினார். உலகளவிலான தொடரில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என சாதனை படைத்தார்.
ஊக்கமருந்து தடை
2021, அக்., ல் நடந்த ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால், 2 ஆண்டு (2023, ஜூலை வரை) தடை விதிக்கப்பட்டது. கடைசியாக தாஷ்கென்ட்டில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் (2024, மே) தங்கம் கைப்பற்றினார். இருப்பினும் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெறவில்லை. தற்போது சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் தீபா கர்மாகர்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,''ஜிம்னாஸ்டிக்ஸ் எனது வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இருந்தது. பல்வேறு வெற்றிகள், பெருமை, உயர்வு என வாழ்க்கையில் பல்வேறு மகிழ்ச்சி கொடுத்தது. நீண்ட யோசனைக்குப் பின் ஓய்வு பெறுகிறேன். இது அவ்வளவு எளிதல்ல என்றாலும், சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு.
உலக அரங்கில் இந்தியாவுக்காக விளையாடியது, பதக்கங்கள் வென்றது, ரியோ ஒலிம்பிக்கில் 'புரோடுனோவா' முறையில் திறமை வெளிப்படுத்தியது, எனது ஜிம்னாஸ்டிக்ஸ் வாழ்க்கையின் உச்சமாக இருக்கும்.
கடைசியாக தாஷ்கென்ட்டில் தங்கம் வென்றது திருப்புமுனையாக இருந்தது. இந்த வெற்றிக்குப் பின் மீண்டும் சர்வதேச அரங்கில் ஜொலிக்கலாம் என நம்பினேன். ஆனால் எனது உடல் ஒத்துழைக்கவில்லை. ஜிம்னாஸ்டிக்ஸ் அரங்கில் இருந்து விலகினாலும், இதில் கிடைத்த மகிழ்ச்சிகரமான தருணங்கள் என்றும் என் நினைவில் நிற்கும்,''என்றார்.

நான்காவது இடம்
ரியோ ஒலிம்பிக்கில் தீபா கர்மாகர் (15.066), 0.150 புள்ளி வித்தியாசத்தில், சுவிட்சர்லாந்தின் ஸ்டெயின்குருபெரிடம் (15.216) வெண்கலப் பதக்கத்தை நழுவவிட்டு, நான்காவது இடம் பிடித்தார்.

'புரோடுனோவா குயின்'
பெண்களுக்கான ஆர்ட்டிஸ்ட் ஜிம்னாஸ்டிக்கில் கடினமான வால்ட் 'புரோடுனோவா'. ஸ்பிரிங் பீம் மீது பேலன்ஸ் செய்து, அந்தரத்தில் தாவி, இருமுறை 'சாமர் சால்ட்' (தலைகீழாக) அடித்து, கீழே விழாமல் நிற்க வேண்டும். கொஞ்சம் தவறினாலும் கழுத்து திருகிவிடும் அபாயம் உள்ளது. இந்த சாகசத்தை, உலகில் ஐந்து வீராங்கனை மட்டும் நிகழ்த்தினர். தீபா கர்மாகர் மட்டும் 2014, 2016 என இருமுறை அசத்தியதால் இவரை 'புரோடுனோவா குயின்' என்பர்.

Advertisement