குலசை திருவிழாவில் பங்கேற்க கட்டுப்பாடுகள்: துாத்துக்குடி மாவட்ட காவல் துறை அறிவிப்பு

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா, 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 12ம் தேதி நடக்கிறது.

இதுதொடர்பாக மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் ஜாதி சின்னங்களுடன் கூடிய கொடியோ, தொப்பி மற்றும் ரிப்பன்களையோ, ஜாதி ரீதியான டி சர்ட் மற்றும் உடைகளை அணிந்து வரக் கூடாது.

ஜாதி தலைவர்கள் போன்று வேடமிட்டு வரவோ, காவல் துறையினரை போன்று சீருடை அணிந்து வேடமிட்டு வரவோ அனுமதி இல்லை.

உலோகத்திலான வேல், சூலாயுதம், வாள் போன்ற ஆயதங்கள் கொண்டு வரக் கூடாது. தசரா குழுவினர் பக்தி பாடல்களை தவிர ஜாதி ரீதியான பாடல்களோ, இசையோ இசைப்பதற்கு அனுமதி இல்லை.

தசரா திருவிழாவை அமைதியான முறையில் எந்தவித அசம்பாவிதமுமின்றி மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் நடத்திட முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement