ஆவினில் மேலாளர் வேலை வாங்கித் தருவதாக மோசடி அ.தி.மு.க., முன்னாள் நிர்வாகி கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்துாரைச் சேர்ந்த ரவீந்திரன் 49, உறவினருக்கு ஆவின் மாவட்ட மேலாளர் வேலை வாங்கித்தருவதாக ரூ. 30 லட்சம் மோசடி செய்த வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் விஜய நல்லதம்பியை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சாத்துாரைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவர் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவரின் அக்கா மகனிற்கு ஆவின் மாவட்ட மேலாளர் வேலை வாங்கித்தருவதாக கடைக்கு வந்து சென்ற மாரியப்பன் கூறினார். அவர் மூலம் வெம்பக்கோட்டை ஒன்றிய முன்னாள் அ.தி.மு.க., செயலாளர் விஜய நல்லதம்பி அறிமுகமானார். இவர்களுடன் ரவீந்திரன் அப்போதைய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை சந்தித்துள்ளார்.

மேலும் மேலாளர் வேலைக்கு ரூ. 30 லட்சம் கொடுத்தால் வேலை கிடைத்து விடும் என விஜயநல்லதம்பி தெரிவித்தார். அதை நம்பி ரூ. 30 லட்சத்தை ரவீந்திரன் கொடுத்தும் வேலை கிடைக்க வில்லை.

மாவட்ட குற்றப்பிரிவில் ரவீந்திரன் புகார் அளித்தார். குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி உட்பட 7 பேர் மீது வழக்கு பதிந்தனர்.

இவ்வழக்கில் நேற்று அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் விஜயநல்லதம்பியை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement