சில மாதம் முன் திறக்கப்பட்ட மருத்துவமனை கூரை பெயர்ந்தது

வேலுார்: வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டில், நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, சில மாதங்களுக்கு முன் தான் திறக்கப்பட்டது. இங்கு, நாள் ஒன்றுக்கு, 700க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.

சிகிச்சைக்கு நேற்று காலை வந்த அப்பகுதியை சேர்ந்த கர்ப்பிணி இனியா என்பவரை, நர்ஸ் ஒருவர் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது, கட்டடத்தின் கூரை பூச்சு பெயர்ந்து, இருவர் மீதும் விழுந்தது.

இதில், கர்ப்பிணி இனியா படுகாயமடைந்தார். நர்ஸ், லேசான காயங்களுடன் தப்பினார். கூரை பெயர்ந்து விழுந்ததால், நோயாளிகள் அச்சத்தில் வெளியேறினர்.

புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தின் உறுதித்தன்மையை பரிசோதித்து, உரிய நடவடிக்கை எடுக்க, நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement