ரிசல்ட் வெளியிட ரொம்ப லேட் பண்றீங்க! தேர்தல் ஆணையம் மீது பாய்ந்த காங்.,

19

புதுடில்லி: ஹரியானா தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் தாமதப்படுத்துவதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.



ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணும் பணி தொடங்கியது. தேர்தல் முடிவுகளை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்க தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்ததாக செய்திகள் வெளியாகின. பா.ஜ.,வுக்கு பின்னடைவு என்றும் தகவல்கள் வெளிவந்தன. சிறிது நேரத்தில் அதிக தொகுதிகளில் பா.ஜ., முன்னிலை நிலவரம் என கள நிலைமை மாறியது.

தொடக்கத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர், முன்னணி நிலவரம் மாறியதால் ஏமாற்றம் அடைந்தனர். அடுத்தடுத்து நேரம் கடந்து செல்ல, முன்னிலை நிலவரங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் சுணக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டுகளை கூற ஆரம்பித்தனர்.

இந்நிலையில் தேர்தல் முடிவுகளையும், முன்னணி நிலவரங்களையும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தாமதப்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் தாமதம் குறித்து அவர் கூறியதாவது: தேர்தல் ஆணையம் என்பது ஒரு அரசியலமைப்பு. எந்த அழுத்தத்துடன் செயல்படக்கூடாது. தேர்தல் ஆணையத்துக்கு நான் ஒரு கடிதம் எழுதி உள்ளேன்.

செய்திகளில் 12 சுற்றுகள் பற்றிய விவரங்கள் இருக்கும் போது தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் 4 அல்லது 5 சுற்றுகளின் நிலவரங்கள் பற்றிய விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. ஏன் முழுமையாக பதிவேற்றம் செய்யாமல் தாமதப்படுத்துகிறீர்கள்.

ஹரியானா மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றம் நிச்சயம் காங்கிரசுக்கு ஆதரவாக தான் இருக்கும்.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறி உள்ளார்.

Advertisement