ஜம்மு காஷ்மீர் ஓகே; ஹரியானா முடிவை ஏற்க மாட்டோம்; அழுது புலம்புகிறது காங்கிரஸ்

44


புதுடில்லி: '' ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவு மக்கள் விருப்பத்திற்கு எதிராக வந்துள்ளது. இதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம், '' என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

நிராகரிப்பு



ஹரியானா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் இன்று ஓட்டுகள் எண்ணப்பட்டன. ஆரம்பத்தில் முன்னணியில் இருந்த காங்கிரஸ், நேரம் செல்ல செல்ல பின்தங்கி ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது. பா.ஜ., மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. இதனையடுத்து, ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் சரியாக இணையதளத்தில் பதிவேற்றப்படவில்லை என அக்கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தது. ஆனால் அடுத்த சில மணி நேரங்களிலேயே, இக்குற்றச்சாட்டு பொய்யானது எனக்கூறி அதனை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

இதனையடுத்து நிருபர்களை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான பவன் கெரா, மற்றும் ஹரியானா தேர்தல் பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் நிருபர்களை சந்தித்தனர்.

எதிர்பாராதது



அப்போது, பவன் கெரா கூறியதாவது: தேர்தல் முடிவுகள் முற்றிலும் எதிர்பாராதது. அதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் கூறலாம். இது குறித்து புகார்கள் தொடர்ச்சியாக வருகின்றன. ஹிசர், மகேந்திரகார்க் மற்றும் பானிபட் நகரங்களில் மின்னணு ஓட்டு இயந்திரங்களில் கோளாறு உள்ளதாக கட்சி வேட்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதில் உள்ள ஒரு பேட்டரிகள் செயல்படவில்லை என்கின்றனர். இத்தேர்தலில் முடிவுகள் மூலம் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டு உள்ளது. இதனை நாங்கள் ஏற்க மாட்டோம். புகார்களை நாங்கள் பெற்றுவருகிறோம். தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வேட்பாளர்கள் மனு அளித்து வருகின்றனர்.
தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளிக்க உள்ளோம். தேர்தல் முடிவுகள் கள நிலவரத்தை பிரதிபலிக்கவில்லை. ஹரியானாவில் இருந்து இவ்வாறு எதிர்பாராத முடிவு வரும் வரை என யாரும் எதிர்பார்க்கவில்லை. அனைவரும் ஆச்சர்யத்துடன் உள்ளனர்.

ஆச்சர்யம்



ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:தேர்தல் முடிவு எதிர்பார்க்காதது. ஆச்சர்யமாக உள்ளது. கள நிலவரத்திற்கு எதிராக உள்ளது. ஹரியானா மக்களின் எண்ணங்களுக்கு மாறாகவும், ஆட்சி மாற்றம் என்ற விருப்பத்திற்கு எதிராகவும் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என்பதை நாங்கள் அறிவிக்கிறோம்.
ஓட்டு எண்ணிக்கை குறித்தும், மின்னணு ஓட்டு எந்திரம் செயல்பாடு குறித்தும் மூன்று மாவட்டங்களில் இருந்து தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. கட்சி நிர்வாகிகளுடன் பேசி உளளோம். புகார்களை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க உள்ளோம். எங்களது வேட்பாளர்கள் எழுப்பிய கேள்விகளை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க உள்ளோம். ஹரியானா தேர்தல் வெற்றி என்பது முறைகேடான வெற்றி. மக்களின் விருப்பத்திற்கு எதிரான வெற்றி. வெளிப்படையான ஜனநாயகத்திற்கு எதிரான வெற்றி.

காஷ்மீரிலும் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்கக்கூடாது என முயற்சி நடந்தது. ஆனால், மக்கள் தெளிவாக தீர்ப்பு வழங்கி உள்ளனர். இவ்வாறுஅவர் கூறினார்.

Advertisement