அரசு டாக்டர்கள் 50 பேர் ராஜினாமா; மம்தாவுக்கு அதிகரிக்கும் தலைவலி

4

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில், ஆர்.ஜி.கர். மருத்துவமனை பயிற்சி பெண் மருத்துவர் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு, இளம் மருத்துவர்கள் சிலர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் துவக்கி உள்ளனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று 50 மூத்த மருத்துவர்கள் கூட்டாக ராஜினாமா செய்தனர்.

இந்த மருத்துவமனையில் பல்வேறு துறைகளின் தலைவர்கள் கூட்டத்தில் இன்று ராஜினாமா முடிவு எடுக்கப்பட்டது.


இது குறித்து மூத்த மருத்துவர்கள் கூறியதாவது:
ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைச் சேர்ந்த நாங்கள் 50 பேர், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோம்.மருத்துவர்களின் ஒருமைப்பாட்டைக் குறிக்கும் வகையில், மூத்த மருத்துவர்களாகிய நாங்கள் 50 பேரும் ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளோம். உயிரிழந்த அந்த இளம் மருத்துவருக்காக எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


போராட்டம் நடத்தும் இளம் மருத்துவர்கள் கூறுகையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தும் பிரச்சினைகளை தீர்க்க, உரிய அதிகாரியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

இந்த நிலையில், நாங்கள் ஒற்றுமையாக நிற்போம் என்றனர்.

Advertisement