தேசிய விருது பெற்ற மணிரத்னம், ஏஆர் ரஹ்மான், நித்யா மேனன் : ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு

1


புதுடில்லி : மணிரத்னம், ஏஆர் ரஹ்மான், நித்யா மேனன் உள்ளிட்ட தமிழ் மற்றும் இந்திய திரைப்பட கலைஞர்களுக்கு டில்லியில் தேசிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.


மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி வருகிறது. 2022ம் ஆண்டுக்கான 70வது தேசிய திரைப்பட விருதுகள் ஆக., 16ல் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த தமிழ் படமாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன்-1 படம் தேர்வானது. அதோடு இந்த படத்திற்கு சிறந்த பின்னணி இசை, ஒலி வடிவமைப்பு, ஒளிப்பதிவு என 4 விருதுகள் கிடைத்தன. மேலும் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்திற்கு சிறந்த நடிகை மற்றும் நடனம் ஆகிய பிரிவுகளில் 2 விருதுகளும் அறிவிக்கப்பட்டன.


மேலும் சிறந்த நடிகராக காந்தாரா ரிஷப் ஷெட்டி, சிறந்த படமாக ஆட்டம் (மலையாளம்), சிறந்த சண்டை இயக்குனராக அன்பறிவ் (கேஜிஎப்-2), சிறந்த இசையமைப்பாளராக பிரிதம் (பிரம்மாஸ்திரா-1) என பல்வேறு பிரிவுகளிலும் விருதுகள் அறிவிக்கப்பட்டன.



இந்நிலையில் 70வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டில்லியில் இன்று(அக்., 8) நடந்தது. ஜனாதிபதி திரவுபதி முர்மு வெற்றி பெற்ற திரைக்கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

தமிழில் இருந்து தயாரிப்பாளர் லைகா சுபாஸ்கரன் (பொன்னியின் செல்வன் 1), இயக்குனர் மணிரத்னம் (பொன்னியின் செல்வன் 1), ஏஆர் ரஹ்மான் (பொன்னியின் செல்வன் 1), நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்), சதீஷ் கிருஷ்ணன் (திருச்சிற்றம்பலம்), ரவி வர்மா (பொன்னியின் செல்வன்-1), ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (பொன்னியின் செல்வன்-1), அன்பறிவ் (கேஜிஎப்) உள்ளிட்டோர் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News

தாதா சாகேப் விருது




இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, ஹிந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

ஜானிக்கு நோ விருது




திருச்சிற்றம்பலம் படத்திற்காக சிறந்த நடனத்திற்கு சதீஷ் கிருஷ்ணன் உடன் இணைந்து ஜானி மாஸ்டருக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாலியல் வழக்கில் போக்சோ சட்டத்தில் அவர் கைதானதால் அவருக்கான விருது இரு தினங்களுக்கு முன் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement