ஹரியானாவில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்ன?

5

சண்டிகர்: உட்கட்சி பூசல், நகர்ப்புறங்களில் ஆதரவு இல்லாதது, சுயேச்சைகள் போட்டி மற்றும் பா.ஜ.,வின் கடின உழைப்பு ஆகியன காங்கிரஸ் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.

மொத்தம் 90 தொகுதிகளை கொண்ட ஹரியானா சட்டசபைக்கு கடந்த 5 ம் தேதி தேர்தல் நடந்தது. பிரசாரத்தின் போதும் ராகுல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மாநிலத்தில், பா.ஜ., அரசு மீது அதிருப்தி நிலவுகிறது. இதனால், காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என உறுதிபட தெரிவித்தனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்திலும் காங்கிரசுக்கு சாதகமாக தான் இருந்தன. இதனால், உற்சாகமடைந்த அக்கட்சி மூத்த தலைவர்கள் முதல்வர் பதவியை பிடிக்கவும், அமைச்சர் பதவியை பிடிக்கவும் டில்லிக்கு படையெடுத்தனர். ஆனால், ஓட்டு எண்ணிக்கையில் முதலில் காங்கிரஸ் முன்னிலை பெற்றாலும், பிறகு நிலைமை மாறி பா.ஜ., ஆட்சியை 3வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. பா.ஜ., தொண்டர்கள் லட்டு கொடுத்தும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். வெற்றியை எதிர்பார்த்து தோல்வியை சந்தித்த காங்கிரசார் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

காங்., தோல்விக்கு 5 காரணங்கள்



உட்கட்சி பூசல்



கடந்த 2019 தேர்தலில் காங்கிரஸ் 31 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. இந்த முறை கூடுதலாக 7 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இது கடந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து அக்கட்சி மீண்டு வரவில்லை என்பது காட்டுகிறது. இந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு முக்கிய காரணம் காங்கிரசில் இருந்த உட்கட்சி பூசலே முதன்மையான காரணம். தேர்தலுக்கு முன்னர், வெற்றி உறுதியாகிவிட்டதாக கருதிய மூத்த தலைவர்கள், யார் முதல்வர் பதவியில் அமர்வது என்ற போட்டியில் ஈடுபட்டனர்.

அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் மற்றும் மற்றொரு மூத்த தலைவர் குமாரி செல்ஜா வெளிப்படையாகவே முதல்வர் பதவிக்காக மோதிக் கொண்டனர். இது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை கொடுத்ததுடன், வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மாநிலத்தில் இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியில் உள்ள பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சியினரை ஒற்றுமைபடுத்துவதில் காங்கிரஸ் திணறியது. எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடந்தது களத்தில் தெளிவாக தெரிந்தது. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணியை முடிவு செய்வதில் பூபிந்தர் சிங் ஹூடாவுக்கு கட்சி மேலிடம் சுதந்திரம் அளித்தாலும், எதுவும் பலன் தரவில்லை.

வெற்றியை பாதித்த பிராந்திய கட்சிகள் சுயேச்சைகள்



இந்த தேர்தலில் காங்கிரஸ் கடந்த தேர்தலை விட கூடுதல் ஓட்டு வாங்கியிருந்தாலும், அதனை வெற்றியாக மாற்ற அக்கட்சி தவிறவிட்டது. பல தொகுதிகளில் அக்கட்சி குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் பின்தங்கியது. அங்கெல்லாம், அரசு மீதான அதிருப்தி ஓட்டுகளை, சுயேச்சைகள் மற்றும் பிராந்திய கட்சிகள் வாங்கின. அதேநேரத்தில் பிராந்திய கட்சிகளும் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. இந்திய தேசிய லோக் தளம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியன தலா ஒரு தொகுதியிலும் சுயேச்சைகள் 4 தொகுதிகளிலும் மட்டுமே முன்னிலையில் உள்ளனர்.

ஜாதி ஓட்டுக்கள்



ஹூடா தலைமையில் காங்கிரஸ் கட்சியானது, மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள ஜாட் சமூகத்தினரின் ஓட்டுகளை பெறுவதில் கவனம் செலுத்தியது. மாறாக, பா.ஜ.,வானது, ஜாட் அல்லாத சமூகத்தின ஒருங்கிணைத்து தனக்கு ஆதரவாக மாற்றியது. ஜாாட் சமூகத்தினர் ஓட்டு காரணமாக காங்கிரஸ் கட்சி தொகுதிகள் கிடைக்க, மற்ற சமூகத்தினரின் ஆதரவால் பா.ஜ., ஆட்சியை தக்க வைத்து உள்ளது.

பா.ஜ.,வின் உழைப்பு



மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க பா.ஜ., அமைதியாக களத்தில் இறங்கி வேலைபார்த்தது. மாநிலத்தில் அதிருப்தி நிலவிய நிலையில் கட்சியின் பிரசார குழுவிற்கு தலைவராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நியமிக்கப்பட்டார். அவரும் களத்தில் தீவிரமாக பணியாற்றினார். பா.ஜ.,வின் தேர்தல் இயந்திரம் வேகமாக செயல்பட்டு, காங்கிரசிடம் இருந்து வெற்றி வாய்ப்பை பறித்து சென்றது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் அஜய் குமார் ஆங்கில டிவிக்கு அளித்த பேட்டியில், மக்களின் ஆதரவை ஓட்டுகளாக மாற்ற முடியாதது ஏன் என்பதை கட்சி சுயபரிசோதனை செய்ய வேண்டும் என வேதனையுடன் தெரிவித்தார்.

நகர்ப்புற ஓட்டுகள்



கடந்த இரு தேர்தல்களிலும் கூர்கான் மற்றும் பரிதாபாத் போன்ற நகர்ப்புறங்களில் பா.ஜ.,வுக்கு ஆதரவு அதிகமாக இருந்தது. இதனால், கிராமப்புறங்களில் வெற்றி பெறுவோம் என காங்கிரஸ் எதிர்பார்த்தது. ஆனால், அப்படி நடக்கவில்லை என்பது தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. கூர்கான், பரிதாபாத் மற்றும் பல்லப்கர்க் ஆகிய நகரப்புற பகுதிகளில் இம்முறையும் பா.ஜ.,வின் ஆதிக்கமே உள்ளது.

ஆட்சி அமைக்க பா.ஜ., தீவிரம்



ஒருபுறம் தோல்வியால் காங்கிரசார் துவண்டு விட்ட நிலையில், 3வது முறை ஆட்சியை தக்க வைத்துள்ள பா.ஜ., அடுத்து ஆட்சி அமைப்பதற்கான பணிகளை உடனடியாக துவக்கிவிட்டது.

Advertisement