ஆஸி., கலக்கல் வெற்றி * வீழ்ந்தது நியூசி.,

சார்ஜா: உலக கோப்பை 'டி-20' லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, 60 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. நேற்று நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
மூனே நம்பிக்கை
ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் அலிசா ஹீலே, பெத் மூனே ஜோடி நல்ல துவக்கம் தந்தது. 5.2 ஓவரில் 41 ரன் சேர்த்த போது அலிசா (26) அவுட்டானார். மூனே 32 பந்தில் 40 ரன் எடுத்தார். எல்லிஸ் பெர்ரி (30), போபே (18) உதவினர். இதன் பின் நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாத ஆஸ்திரேலிய வீராங்கனைகள் வருவதும், போவதுமாக இருந்தனர். யாரும் ஒற்றை இலக்க ரன்னை தாண்டவில்லை.
ஒரு கட்டத்தில் 109/2 என வலுவாக இருந்த ஆஸ்திரேலிய அணி, அடுத்து 29 ரன் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது (138/8). முடிவில் ஆஸ்திரேலிய அணி 20 ஒவரில் 148/8 ரன் மட்டும் எடுத்தது. நியூசிலாந்தின் அமேலியா 4 விக்கெட் சாய்த்தார்.
திணறல் பேட்டிங்
அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலிய பந்துவீச்சில் அதிர்ந்தது. சுஜீ (20), அமேலியா (29) மட்டும் ஆறுதல் தந்தனர். மற்ற வீராங்கனைகள் கைவிட, நியூசிலாந்து அணி 19.2 ஓவரில் 88 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது.

Advertisement