வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு ஊழியர் குடும்பத்திடம் பணம் வசூல்

தண்டராம்பட்டு:திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு, பி.டி.ஓ., அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக சூர்யா, 32, என்பவர் பணிபுரிந்து வந்தார்.

இவர், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், 2019ம் ஆண்டு முதல், 2023 வரை, பயனாளிகளுக்கு தவணை முறையில் பணம் வழங்கும் பணியில் இருந்தார்.

அவர், பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு அனுப்ப வேண்டிய, 19 லட்சம் ரூபாயை, தன் நண்பர் வங்கி கணக்கிற்கு அனுப்பி மோசடி செய்தார்.

வீடு கட்டும் பயனாளி ஒருவர், பி.டி.ஓ., அலுவலகத்தில் புகார் செய்ததை அடுத்து, முறைகேடு அம்பலமானது.

தற்காலிக ஊழியர் சூர்யா, தன் நண்பர் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி மோசடி செய்தது தெரிந்தது. மேலும் கணக்குகளை ஆய்வு செய்ததில், பல பயனாளிகளின் பெயரில், 19 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரிந்தது.

சூர்யாவிடம், பண மோசடி விவகாரம் குறித்து பி.டி.ஓ., அலுவலக ஊழியர்கள் விசாரணை நடத்தினர். பணத்தை கையாடல் செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.

அவர் முறைகேடு செய்திருந்த பணத்தை, அவரும், அவரின் குடும்பத்தினரும் செலுத்தி விடுவதாக உறுதியளித்தனர். அதன்படி, அவரது குடும்பத்தினர் பணத்தை திரும்ப செலுத்தினர்.

எனினும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க, மாநில அரசு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கான பணி, விரைவில் துவங்க உள்ளது.

Advertisement