கோவிலில் நிறுத்தியிருந்த டூ - வீலர்கள் எரிந்து நாசம்

ஈரோடு:ஈரோடு, சின்ன சடையம்பாளையம் மாரியம்மன் கோவிலில், சமீபத்தில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையடுத்து மண்டல பூஜை துவங்கியது. பூஜை நிறைவடைய உள்ளதால், கோவில் நிர்வாகி குப்புசாமி தலைமையில், ராமேஸ்வரத்தில் தீர்த்தம் எடுத்துவர, 6ம் தேதி இரவு சிலர் சென்றனர்.

இவர்கள் வந்த டூ - வீலர், மொபட் உள்ளிட்ட 10 வாகனங்கள், கும்பாபிஷேகத்துக்காக கோவில் முன் போடப்பட்டிருந்த தகர ஷீட் கூரையின் அடியில் நிறுத்தியிருந்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் தகர ஷீட் தீப்பிடித்தது. எரிந்த நிலையில் டூ - வீலர்கள் மீது விழுந்ததில் டூ - வீலர்களும் எரியத் துவங்கின. ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள், 45 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், 10 டூ - வீலர்களும் முற்றிலும் எரிந்து விட்டன.

ஈரோடு தாலுகா போலீசார், தடய அறிவியல் துறையினர் ஆய்வில் ஈடுபட்டனர். இடி, மின்னல் தாக்கியதால் தீ விபத்து சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவித்தனர்.

Advertisement