தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தில் இலவச பயிற்சி


தொழில் முனைவோர் மேம்பாட்டு
பயிற்சி நிறுவனத்தில் இலவச பயிற்சி

தர்மபுரி, அக். 9-
தர்மபுரியில், இந்திய அரசின் வேளாண் அமைச்சகத்தின் அங்கீகாரத்துடன் மேனேஜ், ஏ.சி., மற்றும் ஏ.பி.சி., திட்டத்தில் வேளாண், தோட்டக்கலை, கால்நடை, மீன்வளம் சார்ந்த, டிப்ளமோ பட்டம், முதுகலை பட்ட படிப்புகள் படித்த, 28 நபர்களுக்கு, ஆக., 21 முதல், அக்., 4 வரை, 45 நாட்கள் முழு நேர இலவச பயிற்சி அளிக்கபட்டது.
இதில் வேளாண், தோட்டக்கலை, கால்நடை, மீன்வளம், போன்ற துறைகளில், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்வது, தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிகள், மூலப்பொருட்கள் வாங்கும் முறைகள், தொழில்நுட்ப பயன்பாடுகள், விற்பனை உத்திகள், போட்டியாளர்களை எதிர்கொள்ளும் முறைகள், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டும் வழிமுறைகள், அனைத்து அரசு துறைகள், வங்கிகள், நபார்டு திட்டங்கள் பற்றிய பாடங்கள்
நடத்தப்பட்டது.
பயிற்சி நிறைவுக்கு பின், ஓராண்டு வரை, ஐ.ஈ.டி., வழிகாட்டியாக செயல்படும். இப்பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு, தொழில் திட்டத்திற்கு ஏற்ப வங்கிக்கடன் உதவிகள், பயிற்சி முடித்த, தொழில் முனைவோருக்கு, 36 முதல், 44 சதவீதம் வரை, நபார்டு வங்கி மானியங்கள் கிடைக்கச் செய்ய, இந்த பயிற்சி தொடங்கப்பட்டது. பயிற்சி நிறைவு விழாவில், தர்மபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் குணசேகரன் சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்தியன் வங்கி மேலாளர் ராமஜெயம், பாரத் ஸ்டேட் வங்கி மேலாளர் வினோத் குமார், தர்மபுரி சிறுதொழில்கள் சங்க செயலாளர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், ஐ.ஈ.டி., நிறுவனம் சார்பில், இயக்குனர் மோகன்ராம், திட்ட வழிகாட்டி ஜார்ஜ் ராஜா செல்வம், ஆகியோர் பயிற்சி மற்றும் விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். இலவச பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுடையவர்கள் தர்மபுரி மாவட்டம், தேவரசம்பட்டியில் உள்ள, ஐ.ஈ.டி.,யை அணுக தெரிவிக்கப்பட்டது.

Advertisement