மாநில ஹேக்கத்தான் போட்டி பி.எஸ்.ஆர்., கல்லுாரி சாதனை

சிவகாசி : தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு , புத்தாக்க அமைப்பின் சார்பில், மாநில அளவிலான 2023 -- 24 ஆண்டிற்கான ஹேக்கத்தான் போட்டி நடந்தது.

இதில் 38 மாவட்டங்களில் பிரச்னைகளை கண்டறிதல் முகாம்கள் நடத்தப்பட்டு, 2556 பிரச்னைகள் அடையாளம் காணப்பட்டது. அதன் ஒரு கட்டமாக 1990 மாணவ வழிகாட்டிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களைக் கொண்டு 811 கல்லுாரிகளில் 1414 புத்தாக்கம் மற்றும் தொழில் முனைதல் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

இதில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 432 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி மின்னணுவியல் தொடர்பியல் துறை மாணவிகள் ஏஞ்சல் தர்ஷினி ஜமுனா ஸ்ரீ ஆகியோர் பல்வேறு கட்ட மதிப்பீடுகளுக்கு பின்னர் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு, மனிதர்கள் ஆரோக்கியம் இவற்றை கருத்தில் கொண்டு மக்கும் நெகிழியை பயன்படுத்தி தண்ணீர் குடுவை தயாரிக்கும் புத்தாக்க திட்டத்தினை வெளியிட்டு முதல் பரிசான ரூபாய் ஒரு லட்சம் வென்றனர்.

வெற்றி பெற்ற மாணவிகள், துறைத் தலைவர் வளர்மதியை கல்வி குழுமம் தாளார் சோலைசாமி இயக்குனர் விக்னேஷ் பிரியா பாராட்டினர்.

Advertisement