ஜானகிபுரம் பைபாஸ் சந்திப்பு பாலத்தில் வாகன ஓட்டிகளுக்கு தொடரும் குழப்பம்

விழுப்புரம் : விழுப்புரம் ஜானகிபுரம் நான்கு வழிச்சாலை பைபாஸ் சந்திப்பு பாலத்தில் தொடரும் குழப்பமான நிலையால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.


விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில், விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம் பைபாஸ் சந்திப்பில், சென்னை - திருச்சி மார்க்கம், புதுச்சேரி - நாகை மார்க்கம், விழுப்புரம் மார்க்க பகுதிகளை இணைக்கும் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.


இந்த மேம்பாலத்தில் தற்காலிகமாக வாகனங்கள் செல்கின்றன. பல்வேறு சாலை சந்திப்புகள் உள்ளதால் வழிகாட்டி பலகைகள் அமைத்துள்ளனர். இருப்பினும், மேம்பாலம் பகுதியில் குழப்பம் நிலவுவதால், சிறுசிறு விபத்துகள் ஏற்படுகிறது.


திருச்சி மார்க்கத்தில் இருந்து விழுப்புரம், புதுச்சேரி செல்லும் வாகன ஓட்டிகள், பாலத்தின் கீழே இறங்கியவுடன், போதிய தகவல் பலகை இல்லாமல், குழப்பம் அடைகின்றனர்.

விழுப்புரத்தில் இருந்து செல்லும் வாகனங்கள், புதுச்சேரி சாலைக்கு செல்வதற்கு வலது புறமாக திரும்பி, ஒரே சாலையில் எதிரெதிராக செல்ல வேண்டிய ஆபத்தான நிலையில் திருப்பி விடப்படுகிறது.

அங்குள்ள இடதுபுற சாலையில் கண்டம்பாக்கம், மரகதபுரம், ஜானகிபுரம் கிராம சாலைகளுக்கு மட்டும் பிரித்து விடப்பட்டுள்ளது. இதனையறியாமல் புதுச்சேரி மார்க்க வாகன ஓட்டிகள் பலர் இடதுபுற சாலையில் சென்று ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

பாலத்திற்கு கீழ் இறங்கிச் செல்வதற்கு குழப்பமான சூழல் உள்ளதால், கார், வேன், இலகுரக வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர்.

இங்கு சுற்றுப்பகுதி மக்கள் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்படவில்லை. இரவில் மேம்பாலத்தில் உள்ள மின் விளக்குகள் அடிக்கடி எரியாததால் அங்கு அமர்ந்து மது அருந்துவோரால் அச்சுறுத்தல் உள்ளது.

புதிய மேம்பாலத்தில் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் குழப்பமான சூழலை போக்க, போலீசார் நியமிக்க வேண்டும்; போதிய அளவில் வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement