ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் நோயாளிகள் வெளியேற்றம்

புதுச்சேரி, : ஜிப்மர் மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

''புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், பகல் 12:00 மணிக்கு மேல் ஜிப்மர் வளாகத்தில் உள்ள நோயாளிகள், மாணவர்கள் அனைவரும் வெளியேற வேண்டும்'' என, ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வாலுக்கு நேற்று காலை ஒரு இ-மெயில் வந்தது. இதுபற்றி உடனடியாக கோரிமேடு போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது.

சீனியர் எஸ்.பி.க்கள் கலைவாணன், நாரா சைதன்யா, எஸ்.பி.க்கள் வீரவல்லபன், ரகுநாதன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஜிப்மர் மருத்துவமனையில் குவிக்கப்பட்டனர். ஜிப்மர் வளாகத்தில் இயங்கும் மருத்துவ கல்லுாரி, செவிலியர் கல்லுாரி, கேந்திர வித்யாலயா ஆகிய கல்வி நிறுவனங்களுக்கு அரைநாள் விடுமுறை அளித்து மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். வார்டில் சிகிச்சையிலிருந்த நோயாளிகளும், உடனிருந்தவர்களும் வெளியே அனுப்பப் பட்டனர். நான்கு மோப்ப நாய்கள் மூலம் அவசர சிகிச்சை பிரிவு உட்பட, அனைத்து சிகிச்சை பிரிவு கட்டடங்கள், கேண்டீன், பொதுமக்கள் அமரும் கூடங்கள், அலுவலகங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மருத்துவமனை வளாகத்தில் புதிய நபர்களை அனுமதிக்கவில்லை. டாக்டர்கள் மற்றும் தீவிர அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை மட்டும் அனுமதித்தனர்.

பகல் 12:30 மணி துவங்கி, மாலை 5:30 மணிக்கு முடிந்த சோதனையில் வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் இ- மெயில் எங்கிருந்து அனுப்பப் பட்டது என சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement