கணக்கில் வராமல் ரூ.3.5 லட்சம்: தனியார் மருத்துவ கல்லுாரிகள் 'கறார்'

1

தனியார் மருத்துவக் கல்லுாரிகள், அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் சேருவோரிடம், கணக்கில் வராத வகையில், 3.5 லட்சம் ரூபாய் வசூலிப்பதால், மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


தமிழகத்தில், 22 தனியார் மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இதில், சிறுபான்மையினர் கல்லுாரிகளில், 50 சதவீதமும், சிறுபான்மை அல்லாத கல்லுாரிகளில், 65 சதவீத இடங்களும் அரசு ஒதுக்கீட்டுக்கு தரப்படுகின்றன.


நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, சிறுபான்மை கல்லுாரிகளில், 35 சதவீதமும், சிறுபான்மை அல்லாத கல்லுாரிகளில், 20 சதவீதமும் ஒதுக்கப்படுகின்றன. மற்ற இடங்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான, என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டிற்கு செல்கின்றன. இதில், அரசு ஒதுக்கீட்டுக்கு 4.5 லட்சம் ரூபாய்; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 13.5 லட்சம் ரூபாய் வரை, அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளது.


அரசு ஒதுக்கீட்டுக்கு, 4.5 லட்சம் கட்டணம் வசூலிக்க வேண்டிய நிலையில், 11 லட்சம் வரை கேட்பதால், மாணவர்கள் பலர், அந்த ஒதுக்கீட்டில் சேர முடியாமல் இடங்களை கைவிட்டு வருகின்றனர். அதேபோல, நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 19.5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


இதுதொடர்பாக, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனகரத்தின் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்களுக்கு புகார் அளித்தால், முறையான பதில் கிடைப்பதில்லை என, பாதிக்கப்பட்ட பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.


இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெற்றோர் கூறியதாவது: தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்கைக்கு செல்லும்போது, நுழைவாயிலிலேயே, மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். பின், மாணவர் சேர்க்கைக்கு முன், கணக்கில் வராத வகையில், 3.5 லட்சம் ரூபாய் கேட்கின்றனர். இதுதவிர, அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மற்றும் இதர கட்டணம் செலுத்த வேண்டும். இந்த, 3.5 லட்சம் ரூபாய்க்கு எவ்வித ரசீதும் கொடுக்கவில்லை.


தனியார் கல்லுாரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை சுட்டிக்காட்டி, மருத்துவக் கல்வி இயக்குனரகத்திற்கு, 'கண்ணையும் காதையும் மூடிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்களா?' எனக் கேட்டு அனுப்பிய மின்னஞ்சலுக்கு இதுவரை பதிலில்லை. தனியார் கல்லுாரிகள், மருத்துவ பல்கலையில் உள்ள அளவுக்கு கட்டணம் வசூலிக்கின்றன. இதெல்லாம் அரசு அதிகாரிகளுக்கு தெரிந்தே நடப்பதால், கவுன்சிலிங் நடத்தாமல் பணம் கொடுப்பவருக்கு மட்டுமே மருத்துவ படிப்பு என, அறிவித்து விடலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


மருத்துவக் கல்வி இயக்குனரக அதிகாரிகள் கூறியதாவது: தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தினமும், நுாற்றுக்கணக்கான மின்னஞ்சல், தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. அவர்களுக்கு உரிய பதில் அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

நன்றாக தெரிந்திருந்தும் அரசு மவுனம் ஏன்?


மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வால், கிராமப்புற மற்றும் ஏழை, எளிய மாணவர்கள், மருத்துவம் படிக்க முடியாமல் இருப்பதாக, தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன. ஆனால், நீட் தேர்வு எழுதி, கவுன்சிலிங்கில் இடம் பெற்றும், தனியார் கல்லுாரிகளில் கூடுதல் கட்டணம் கேட்பதால், கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. தனியார் கல்லுாரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து, அரசு நன்றாக அறிந்துள்ள நிலையிலும், நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என, பாதிக்கப்படும் கிராமப்புற மாணவர்களின் பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர்.



- நமது நிருபர் -

Advertisement