ஆர்.டி.ஓ., நடவடிக்கையால் சாய ஆலை அதிபர்கள் கலக்கம்

பள்ளிப்பாளையம்: விதிமீறி செயல்படும் சாய ஆலைகள் மீது திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., நடவடிக்கை எடுத்து வருவதால், பள்ளிப்பாளையம் பகுதி சாய ஆலை அதிபர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே, சமயசங்கிலி பகுதியில் செயல்படும் சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் சாயக்கழிவால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை, குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், கடந்த ஆக., 15ல் சமயசங்கிலி பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. அதில், சாயக்கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிக்கிறது என, ஆதாரத்துடன் மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும், கலெக்டரிடமும் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, கலெக்டர் உத்தரவுப்படி, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் வருவாய்த்துறை, நீர் வளத்துறை, மின்வாரியம், பள்ளிப்பாளையம் யூனியன் மற்றும் பஞ்., அதிகாரிகள் இடம் பிடித்துள்ளனர்.

இந்த குழுவினர் கடந்த மாதம், சமயசங்கிலி பகுதியில் விதிமீறி செயல்பட்ட சாய ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அந்த ஆலை விதிமீறி செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி உத்தரவுப்படி, முதல்கட்ட நடவடிக்கையாக விதிமீறி செயல்பட்ட சாய ஆலைக்கு, நேற்று முன்தினம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுபோல் பல சாய ஆலைகள், பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் விதிமுறை மீறி இயங்கி வருகின்றன. ஆர்.டி.ஓ.,வின் அதிரடி நடவடிக்கையால், சாய ஆலை அதிபர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Advertisement