ஏன் நாங்க தோற்றோம்...! தினுசாய் ஒரு காரணம் சொன்ன மாயாவதி

4

லக்னோ; ஹரியானா சட்டசபை தேர்தல் தோல்விக்கு ஜாட் சமூக மக்களின் சாதிவெறியே காரணம் என்று உ.பி. முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி குற்றம்சாட்டி உள்ளார்.



ஹரியானாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி, பா.ஜ., அமோக வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது. தோல்விக்கு தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளே காரணம் என்று காங்கிரஸ் புகார் கூறி இருக்கிறது. இந்திய தேசிய லோக்தளம் கட்சியுடன், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

தேர்தல் முடிவில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 1.82 சதவீதம் ஓட்டுகளும், இந்திய தேசிய லோக்தளம் கட்சிக்கு 4.14 சதவீதம் ஓட்டுகளும் கிடைத்தன. இந் நிலையில் ஹரியானா தேர்தல் தோல்விக்கு ஜாட் சமூக மக்களின் சாதிவெறியே காரணம் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது; இந்திய தேசிய லோக்தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டோம். ஆனால் தேர்தல் முடிவுகள் எங்களுக்கு எதிராக உள்ளன.

ஜாட் சமூக மக்களின் சாதிய மனோபாவமே எங்களின் தோல்விக்கு காரணம். சில தொகுதிகளில் எங்கள் கட்சி வேட்பாளர்கள் சிறிய அளவு ஓட்டு வித்தியாசத்தில் தான் வெற்றியை இழந்திருக்கின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஜாட் சமூக மக்கள் தங்கள் சாதிய பாகுபாட்டை மாற்றிக் கொண்டனர். அவர்களில் பலர் எங்கள் கட்சியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,க்களாக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர். ஹரியானாவில் உள்ள ஜாட் சமூக மக்களும் தங்களின் மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரையாக கூறுகிறேன்.

இவ்வாறு மாயாவதி தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி உள்ளார்.

Advertisement