6500 அடி உயர மலையில் தென்பட்ட மயில் ; சுற்றுச்சூழல் பாதிப்பால் இடம்பெயர்கிறதா

டேராடூன் : நிலப்பரப்பு மற்றும் குன்றுகளில் மட்டுமே வாழும் மயில்கள், உத்தரகண்டின், 6500 அடி உயர மலைப்பகுதியில் தென்பட்டது மிகவும் ஆச்சரியமான காட்சி என்றும், சுற்றுச்சூழல் மாற்றங்கள் வனவிலங்குகள் இடம் பெயர்வதை பாதித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


உத்தரகண்ட் மாநிலம், பாகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள காப்லிகேர் வனப்பகுதியில் ஏப்ரல் மாதத்திலும், கதயத்பரா வனப்பகுதியில் கடந்த 5ம் தேதியும் மயில்கள் தென்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்தனர்.


இது குறித்து, பாகேஷ்வர் வனப்பிரிவு அதிகாரி தியான் சிங் கராயத் நேற்று கூறுகையில், “வழக்கமாக 1600 அடி உயரத்தில் காணப்படும் மயில்கள் 6500 அடி மலைப்பகுதியில் தென்பட்டது உண்மையில் ஆச்சரியமான காட்சி. சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள் வனவிலங்குகளின் இடப்பெயர்வை பாதிக்க துவங்கியுள்ளன,” என்றார்.

இது குறித்து, டேராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு கல்வி மையத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் சுரேஷ்குமார் கூறியதாவது:

பொதுவான பறவை இனத்தை சேர்ந்த மயில்கள், குறிப்பாக தங்கள் வாழ்விடத்தை தேர்ந்தெடுக்கும் வழக்கம் இல்லாதது. நிலப்பரப்புகளில் வாழும் இந்த பறவை இனங்கள், ஹிமாச்சல பிரதேச மலைகளில் கூட தென்பட்டுள்ளன.

மலைப் பிரதேசங்களில் குளிர் குறைந்து வருவதும், அதிக உயரமான பகுதிகளில் நிலவும் தட்பவெப்ப நிலையை வாழ்வதற்கு ஏற்றதாக மயில்கள் கருதியிருக்கலாம்.

மலைப்பகுதிகளில் விவசாயம் மற்றும் மனித குடியிருப்புகளை விரிவுபடுத்துதல் போன்ற செயல்கள் அதிக வெப்பத்துக்கு வழிவகுத்துள்ளன. இதன் காரணமாகவும் இடப்பெயர்வு ஏற்பட்டு இருக்கலாம்.

குளிர்காலம் துவங்கியதும், மயில்கள் மீண்டும் நிலப்பரப்புக்கு இடம்பெயர வாய்ப்புள்ளது. மேலும், மயில்களை இரண்டு சந்தர்ப்பங்களில் கண்டுவிட்டு ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. இது போல அடிக்கடி நிகழ்ந்தால் தான், மயில்கள் தங்கள் வாழ்விடத்தை மாற்ற முயல்கின்றன என்ற முடிவுக்கு வரமுடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement