பாசன பகுதியில் தண்ணீர் திறப்பு விவகாரம்; பேச்சுவார்த்தையில் விவசாயிகள் வாக்குவாதம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு ஆக., 15ல் தண்ணீர் திறக்கப்பட்டு, 50 நாட்களாகியும் கடைமடைக்கு தண்ணீர் செல்லாததால், அப்பகுதியில் நடவுப்பணி தொடங்கவில்லை. வாய்க்காலில் முழு கொள்ளளவு தண்ணீர் திறக்கப்பட்டும் தண்ணீர் வராதது, விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கால்வாயில் தண்ணீர் திருட்டு தாராளமாக நடப்பதே இதற்கு காரணம் என்று விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதை ஈடு செய்ய, 15 நாட்களாக முறை வைத்து தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் பல பகுதியில் பாசனம் பாதித்து, முறை வைக்காமல் தண்ணீர் திறக்க வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இருதரப்பு விவசாயிகளிடமும், ஈரோடு நீர்வளத்துறை செயற்பொறியாளர் திருமூர்த்தி தலைமையில் நேற்று பேச்சுவார்த்தை தனித்தனியாக நடந்தது.

இதில் ஒரு தரப்பினர் 'முறை வைத்து தண்ணீர் திறப்பதை நிறுத்தி, முழு அளவில் தண்ணீர் தர வேண்டும். நடவுப்பணிகள் நிறைவு பெற்ற பகுதிக்கு வேண்டுமானால் முறை வைக்கலாம். பிற பகுதிக்கு தடையின்றி, இன்னும், 10 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் தர வேண்டும்' என வலியுறுத்தினர்.
மற்றொரு தரப்பினர் 'தண்ணீர் திருட்டை அதிகாரிகள் தடுப்பதில்லை. செயற்பொறியாளர் முதல் எந்த அதிகாரிகள் உத்தரவையும் லஸ்கர்கள் மதிக்காமல், அவர்களது ஆதாயப்படி தண்ணீர் திறப்பதை மாற்ற வேண்டும்' என்றனர்.

இதையடுத்து கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு உட்பட சில அமைப்புகள் சார்பில் பெரியசாமி, ஈஸ்வரமூர்த்தி, ராமசாமி உட்பட பலர் பங்கேற்றனர். இக்கூட்டம் துவங்கியதும், மற்றொரு தரப்பை சேர்ந்த ரத்தினசாமி, செங்கோட்டையன், ரவி போன்றோர், 'இப்போதைக்கு முறை வைத்து தண்ணீர் திறக்கக்கூடாது. இவர்கள் தேர்தல் மூலம் வெற்றி பெற்ற பாசன சபை அமைப்புகள் இல்லை. இவர்களுடன் பேச்சு நடத்தக்கூடாது' என்றனர். இதனால் அதிகாரிகள் முன்னிலையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, இருதரப்பு விவசாயிகளும் வெளிநடப்பு செய்தனர்.

செயற்பொறியாளர் திருமூர்த்தி, ''விவசாயிகளிடம் கருத்து சேகரிக்கப்பட்டது. பெரும்பாலான விவசாயிகள் கூறியபடி நடவு முடிந்த இடங்களில், முறை வைத்து தண்ணீர் திறப்பதும், மற்ற பகுதிக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறக்கவும் முடிவாகி உள்ளது. இதுபற்றி உதவி செயற்பொறியாளர்கள் அந்தந்த பகுதி விவசாயிகளிடம் பேசி முடிவு செய்வார்கள்,'' என்றார்.

Advertisement