சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்கிறது; தொழில் வளர்ச்சிக்கு குந்தகம்; சி.ஐ.டி.யு., மீது அரசு கோபம்

1

சென்னை: சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக, சென்னை மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வரும் 21ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இதனால், தொழிற்சாலைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர் போராட்டம்



காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில், சாம்சங் நிறுவனத்தின் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அங்கு, பணியாற்றும் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் அளித்தல் உட்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 9ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை கைவிட, தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் அரசு தரப்பில் ஏழு கட்ட பேச்சு நடத்தியும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பிரச்னைக்கு விரைவாக தீர்வு காண, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன், தொழில் துறை அமைச்சர் ராஜா, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் அடங்கிய குழுவை, முதல்வர் ஸ்டாலின் நியமித்தார்.

இக்குழு, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம், சாம்சங் நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களுடன் ஆறு மணி நேரம் பேச்சு நடத்தியது. அதில், ஊழியர்கள் வசதிக்காக, 108 குளிர்சாதன வசதி உடைய பஸ்கள் இயக்குவது, 5,000 ரூபாய் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள், நிர்வாகத்தால் ஏற்கப்பட்டன. அதை ஒரு பிரிவு ஊழியர்கள் ஏற்றுக் கொண்டனர்.

ஆனால், சி.ஐ.டி.யு., சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கும் கோரிக்கையை ஏற்க முடியாது என, சாம்சங் நிர்வாகம் கூறியுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், தீர்ப்பு வந்தவுடன், அதன்படி அரசு செயல்படும் என, அமைச்சர்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

அதை நிராகரித்து, சி.ஐ.டி.யு., சங்கத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் வரை போராட்டம் தொடர்வதாக, சாம்சங் நிறுவன சி.ஐ.டி.யு., தொழிலாளர் சங்க தலைவர் முத்துக்குமார் தெரிவித்தார். பேச்சில் உடன்படாத தொழிலாளர்கள் நேற்று, 26வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம்



முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட வந்த தொழிலாளர்களை தீவிர சோதனைக்கு பின், போலீசார் அனுமதி அளித்தனர். அப்போது, சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மணிகண்டனை கீழே தள்ளி விட்டனர். இதனால், போலீசார் மற்றும் தொழிலாளர்கள் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

போராட்டத்தின் அடுத்தகட்டமாக, வரும் 21ம் தேதி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளின் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, சாம்சங் சி.ஐ.டி.யு., தொழிலாளர் சங்க தலைவர் முத்துக்குமார் தெரிவித்தார். இதனால், இம்மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளும், தொழிலாளர்களும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

அமைச்சர்கள், பத்து மணி நேரம் மேல் பேச்சு நடத்தியும், ஆளும் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு., சங்க தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து வருவது, தி.மு.க.,வுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:

போக்குவரத்து துறை, மின் வாரியம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சங்கத்தினர், புதிய ஓய்வூதியம் ரத்து, காலியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். அரசு நிறைவேற்றவில்லை.

இதனால், அந்த சங்கத்தினர், அரசு மீது அதிருப்தியில் உள்ளனர். அதேசமயம், கூட்டணி கட்சி என்பதால், தி.மு.க., அரசிடம் கடும் எதிர்ப்பை காட்டாமல் உள்ளனர். அந்த கோபத்தின் விளைவாகவே, சாம்சங் விவகாரத்தில், அரசுக்கு சி.ஐ.டி.யு., நெருக்கடி கொடுத்து வருகிறது. இதை, உளவு துறை வாயிலாக, அரசு தெரிந்து கொண்டது. இதற்கு ஏற்றார்போல், மூன்று அமைச்சர்கள் பேச்சு நடத்தியும் போராட்டத்தில் உடன்பாடு ஏற்படவில்லை.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.



'ஒவ்வொரு நாளும் சம்பள இழப்பு தானே!'

சென்னை, தலைமைச் செயலகத்தில், அமைச்சர் ராஜா நேற்று அளித்த பேட்டி:ஆலை நிர்வாகத்துடன் பேசினோம். தொழிலாளர்களுடன், 10 மணி நேரம் பேச்சு நடந்தது. நிர்வாகம், சி.ஐ.டி.யு., மற்றும் இதர சங்கங்கள் சார்ந்த தொழிலாளர்களிடம் பேசினோம். சி.ஐ.டி.யு., சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்கின்றனர். மற்ற கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. சி.ஐ.டி.யு., சங்கம் பதிவு விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. தீர்ப்பு என்ன வருகிறதோ, அதற்கேற்ப நாங்கள் செயல்படுகிறோம் என, நிர்வாக தரப்பில் தெரிவித்தனர். அந்த ஒரு கோரிக்கைக்காக, தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். அது எவ்வளவு துாரம் சரியாக இருக்கும் என தெரியவில்லை. அங்கு பிளஸ் 2, ஐ.டி.ஐ., முடித்தவர்கள், 70,000 ரூபாய் வரை ஊதியம் பெறுகின்றனர். ஒருவருக்கு மட்டும், 21,000 ரூபாய் சம்பளம் கொடுக்கின்றனர். அவர் சரியாக பணிக்கு வரவில்லை. மனிதாபிமான அடிப்படையில், வேலையில் இருந்து நீக்கவில்லை என நிர்வாகம் கூறுகிறது. மற்றவர்கள், 35,000 ரூபாய்க்கு மேல் ஊதியம் பெறுகின்றனர்; அவர்கள் இந்த பேச்சுக்கு வந்து கையெழுத்திட வேண்டும் என்ற அவசியம் இல்லை. வேலை செய்யாத ஒவ்வொரு நாளும் சம்பளம் இழப்பாகும். தொழிலாளர்களுக்கு உறுதுணையாக முதல்வர் நிற்கிறார். முதல்வர் மீது முழு நம்பிக்கை வைத்து, தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும். அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement