மறைக்க வேண்டியது நிறைய இருக்குதோ! கேரள முதல்வருக்கு கவர்னர் 'குட்டு'

5


திருவனந்தபுரம்: தங்கம் கடத்தல் குறித்து விளக்கம் அளிக்க மறுத்த முதல்வர் பினராயி விஜயனுக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் கண்டனம் தெரிவித்தார். தங்கம் கடத்தல் விவகாரத்தில் மறைக்க வேண்டியது உங்களிடம் நிறைய உள்ளதா என்று முதல்வருக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் கேள்வி எழுப்பி உள்ளார்.


கேரளா, மலப்புரம் மாவட்டத்தில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் 150 கிலோ தங்கம் மற்றும் ரூ.123 கோடி மதிப்புள்ள ஹவாலா பணம் மாநில போலீசாரால் கைப்பற்றப்பட்டது. இந்த பணம் தேச விரோத செயல்களுக்காக கேரளாவுக்கு நுழைகிறது என முதல்வர் பினராயி விஜயன் கூறியது பரபரப்பை கிளப்பியது.


இது தொடர்பாக, தன்னிடம் தெரிவிக்காதது ஏன் என்று முதல்வர் பினராயி விஜயனுக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் கேள்வி எழுப்பி இருந்தார். கவர்னரின் நேரடி தலையீடு விதிகளுக்கு முரணானது என பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்தார். ஏற்கனவே கேரள கவர்னர், முதல்வர் இடையே நிலவி வரும் மோதல் போக்கு அதிகரித்தது. இதனால் முதல்வர் பினராயி விஜயனின் எதிர்ப்பு, உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியது.


இந்நிலையில், முதல்வர் பினராயி விஜயனுக்கு, கவர்னர் ஆரிப் முகமது கான் எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தங்கம் கடத்தல் விவகாரத்தில் மறைக்க வேண்டியது உங்களிடம் நிறைய உள்ளதா? தேச விரோத நடவடிக்கைகளுக்காக தங்கம் கடத்தப்படுவது குறித்து மவுனம் ஏன்? கடந்த 3 ஆண்டுகளாக, தேச விரோத செயல்களுக்கு எதிராக நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை.


இது செயலற்ற தன்மை. தங்கக் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை தேச விரோத செயல்களுக்கு பயன்படுத்திய மாபெரும் குற்றத்தை, அரசியலமைப்பு தார்மீகத்தை காரணம் காட்டி, வழக்கமான பிரச்னைகள் போல் விட்டுவிட முடியாது. இவ்வாறு முதல்வர் பினராயி விஜயனுக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisement