இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த 45 படகிற்கு ரூ. 2.62 கோடி நிவாரணம்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் முதல் நாகை மாவட்டம் வரை மீனவர்கள் மீன் வளம் நிறைந்த பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிப்பது வழக்கம். இப்பகுதி மீனவர்கள் சில நேரங்களில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் செல்கின்றனர். இதனால், இலங்கை வசம் தற்போது, 150க்கும் மேற்பட்ட படகுகள் உள்ளன.


இலங்கை சிறைபிடித்த விசைப்படகு, நாட்டுப்படகிற்கு தலா, 6 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. ராமேஸ்வரம், பாம்பனில் இருந்து, 2018 அக்.,29 முதல் 2023 டிச.,13 வரை மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின், 43 விசைப்படகுகள், இரண்டு நாட்டுப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். இப்படகின் உரிமையாளருக்கு தமிழக அரசு சார்பில், 2.62 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.


நேற்று ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் மீன்துறை அதிகாரிகள், படகு உரிமையாளர்களின் ஆதார் கார்டு, படகு ஆர்.சி., புக், வங்கி கணக்கை ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அனுப்பினர். தீபாவளிக்கு முன் நிவாரண உதவி, வங்கி மூலம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement