5வது முறையும் ஜெயம்...! ஜம்மு காஷ்மீர் தேர்தலில் சம்பவம் செய்த காம்ரேட்

4

ஸ்ரீநகர்; ஜம்மு காஷ்மீர் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர் யூசூப் தாரிகாமி குல்காம் தொகுதியில் ஐந்தாவது முறையாக வென்று அசத்தி உள்ளார்.



பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கூட்டணி வென்று ஆட்சியை பிடித்து இருக்கிறது. உமர் அப்துல்லா புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார்.

இந்த தேர்தலில் பல சுவராஸ்யங்கள் இருந்தாலும் குல்காம் தொகுதி வெற்றி அனைவரையும் மீண்டும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் யூசுப் தாரிகாமி ஐந்தாவது முறையாக எம்.எல்.ஏ.,வாக வென்று உள்ளார். இம்முறை அவர், 7,838 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்திருக்கிறார்.

இதற்கு முன்பே இதே தொகுதியில் அவர், 1996, 2002, 2008, 2014ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். 2 தசாப்தங்களாக தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக இருக்கும் தாரிகாமி இம்முறை வெற்றி பெறுவது என்பது சற்றே கடினம் என்று கூறப்பட்டது. அவரை எதிர்த்து அடிப்படைவாத அமைப்பான ஜமாத் இ இஸ்லாமி வேட்பாளராக சுயேட்சையாக களம் இறங்கிய சயர் அகமது ரேசியை காரணம் காட்டுகின்றனர்.

கடும் போட்டியை அவர் அளித்தாலும் இறுதியில் தாரிகாமியே வெற்றி பெற்றார்.
இஸ்லாமியர்கள் அனைவரும் தங்களுக்கே ஓட்டளிக்க வேண்டும் என்று ஜமாத் அமைப்பின் ஆதரவாளர்கள் பிரசாரம் செய்தனர். அதையும் கடந்து தாரிகாமி வெற்றி பெற்றுள்ளார்.

தமது வெற்றி குறித்து தாரிகாமி கூறி உள்ளதாவது; குல்காம் மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன். அங்குள்ள மக்கள் குல்காமுக்காகவும், காஷ்மீருக்காகவும், அவர்களின் உரிமைக்காகவும் போராடினர். அரசுக்கு ஒத்துழைத்தவர்களை தோற்கடித்துள்ளனர்.

ஏராளமான வன்முறைகளுக்கு பின்னர் இது இஸ்லாமுக்கும், மற்றவர்களுக்கும் எதிரான ஒன்றாக கட்டமைக்கின்றனர். இது இஸ்லாமியத்தின் இழப்பு கிடையாது. ஏமாற்றும் அரசியல் செய்பவர்கள், இரட்டை அரசியல் நிலைப்பாட்டை கடைபிடித்தவர்களுக்குதான் இழப்பு.

ஒரு பக்கம், மக்கள் பா.ஜ.,வை முற்றிலும் நிராகரித்துள்ளனர். அதே நேரம் மறுபக்கம் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்துள்ளனர்.

இவ்வாறு தாரிகாமி கூறி உள்ளார்.

1990களில் பிரிவனைவாத கொள்கையில் ஜமாம் இ இஸ்லாமி முன்னணியில் இருந்தது. பின்னர் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து மாறி தேர்தல் கள அரசியலில் கால் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement