'முடா'வை மறக்க ஜாதி கணக்கெடுப்பு அறிக்கை? கட்சிக்குள் மீண்டும் எதிர்ப்பால் முதல்வர் விரக்தி!


'முடா' விவகாரத்தை மறக்க, ஜாதிவாரி கனக்கெடுப்பு அறிக்கை தாக்கல் ஆயுதத்தை எடுத்த முதல்வர் சித்தராமையாவுக்கு, அதே ஆயுதம், 'தலைக்கு மேல் தொங்கும் கத்தி'யாக மாறி உள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்த கூடாது என்று சில மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

முடா எனும் மைசூரு மேம்பாட்டு ஆணைய முறைகேட்டில் முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி, 14 மனைகள் முறைகேடாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. தனக்கு வழங்கப்பட்ட 14 மனைகளையும் மீண்டும் முடாவுக்கு வழங்குவதாக, முதல்வர் மனைவி கடிதம் அனுப்பியிருந்தார். இந்த கடிதத்தை ஏற்றுக்கொண்ட முடா நிர்வாகம், 14 மனைகளின் பத்திரப்பதிவையும் ரத்து செய்தது.

'பிளான் பி'





இப்பிரச்னையில், முதல்வர் சித்தராமையாவுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று கூறி வரும் காங்கிரஸ் மேலிடம், 'பிளான் பி'யை தயாராக வைக்கவும் தீர்மானித்துள்ளது. சித்தராமையா ராஜினாமா செய்தால், யாரை முதல்வராக்க வேண்டும் என்று ஆலோசித்து வருகிறது. இதற்காக, சமீபத்தில் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, துணை முதல்வர் சிவகுமாருக்கு உத்தரவிட்டுள்ளது. அவரும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ரகசியமாக ஆராய்ந்து வருகிறார். இந்த நடவடிக்கை முதல்வர் மாற்றத்துக்கான அறிகுறி என்று கூறி வருகின்றனர்.

ரகசிய உத்தரவு





தொடர்ந்து தனது பதவிக்கு குறி வைத்துள்ள உட்கட்சியினர், எதிர்கட்சியினருக்கு பாடம் புகட்ட சித்தராமையா முடிவு செய்துள்ளார். அதன்படி, தனது ஆதரவாளர்கள் மூலம் குரல் கொடுக்க ரகசிய உத்தரவு பிறப்பித்தார். அதன்படியே அனைத்தும் நடந்தது. காந்தராஜ் தலைமையிலான ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்த கோரி, சில சமுதாய தலைவர்கள், முதல்வர் சித்தராமையாவை சந்தித்து மனு கொடுத்தனர்.

அவரும் அதை ஏற்றுக்கொண்டு, 'அறிக்கைக்கு அனுமதி கொடுக்கும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து அனுமதி பெற்று, அமல்படுத்தப்படும்' என தெரிவித்தார். இதற்கு காங்கிரசின் ஒக்கலிகர், லிங்காயத் சமுதாய எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், தலைவர்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எக்காரணத்தை கொண்டும் இந்த அறிக்கையை அமல்படுத்த கூடாது என்று எச்சரித்துள்ளனர். அதேவேளையில், 'ஆட்சியே போனாலும் இந்த அறிக்கையை அமல்படுத்த வேண்டும்' என காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத் கூறி வருகிறார்.

தலைக்கு மேல் கத்தி





முடா விவகாரத்தை திசை திருப்ப முதல்வர் சித்தராமையா, ஜாதி கணக்கெடுப்பு அறிக்கை என்ற ஆயுதத்தை கொண்டு வந்தார். ஆனுால், அந்த ஆயுதமே, அவருக்கு 'ஏன்டா கொண்டு வந்தோம்' என்று எண்ணும் அளவுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. துணை முதல்வர் சிவகுமார், ஷாமனூர் சிவசங்கரப்பா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜாதி கணக்கெடுப்பு அறிக்கையை, அமைச்சரவையில் கொண்டு வந்தால், எதிர்ப்பு தெரிவிப்போம் என முதல்வருக்கு தகவல் கொடுத்துள்ளனர். எதிர்க்கட்சியினரும், அறிக்கையை அமல்படுத்தினால், அதனால் ஏற்படும் விளைவுகளை காங்கிரஸ் அரசே சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளனர். தற்போது முடா முறை கேட்டுடன், ஜாதி கணக்கெடுப்பு அறிக்கையும், முதல்வருக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

- நமது நிருபர் -

Advertisement